பணியாற்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிப்பு... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி அசத்திய நெடுவாசல் சுரேஷ்...!

பணியாற்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிப்பு... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி அசத்திய நெடுவாசல் சுரேஷ்...!
சுரேஷ்
  • News18
  • Last Updated: December 6, 2019, 7:25 PM IST
  • Share this:
மாதத்திற்கு 40 ஆயிரம் செலவு செய்து லாரியில் தண்ணீர் வாங்கி வந்த நிறுவனம், தற்போது அங்கு பணியாற்றும் சுரேஷ் என்பவரால் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தியுள்ளது.

மழை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி இன்று வீடுகளில் அதிகம் பேர் மழைநீர் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஒரு படி மேலே சென்று தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிக்கும் நவீன திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஏபிபிஎல் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கிறார் சுரேஷ். தொழிற்சாலைக்கு தேவைப்படும் அதிகமான நீரை தனது மழைநீர் திட்டத்தின் மூலம் நிறைவு செய்திருக்கிறார். தொழிற்சாலை பயன்பாட்டிற்கு ஒவ்வொரு நாளும் 4 லாரிகளில் தண்ணீர் வாங்கி இருக்கிறார்கள்.


இதன்மூலம் தொழிற்சாலையின் தண்ணீர் தேவைக்கு ஒரு மாதத்தில் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள் நிர்வாகத்தினர். இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சுரேஷ் தொழிற்சாலையில் ஆரம்பித்த பிறகு தற்போது லாரிகளில் நீர் வாங்குவதை முழுவதுமாக நிறுத்தி விட்டார்கள். அதுமட்டுமல்ல தொழிற்சாலையை சுற்றி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது.

பொதுவாக வீட்டுக் கூரைகளில் தேங்கும் மழைநீரை குழாய் வழியாக கீழே சேகரிப்போம், அல்லவா அது போல்தான்.  ஆனால், கொஞ்சம் நவீனமாக யோசித்து இவர் தொழிற்சாலையின் நாற்பது ஆயிரம் சதுர அடி மேற்கூரையில் தேங்கும் மழைநீரை பிவிசி பைப் மூலமாக கீழே கொண்டு வந்து தொழிற்சாலை நீர் தொட்டிகளில் சேகரித்து அதனை சுத்தப்படுத்தி தொழிற்சாலையின் பயன்பாட்டிற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த உதவி இருக்கிறார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் மழை பெய்தாலே ஒரு லட்சத்து 34 ஆயிரம் கன அடி உள்ள தொட்டி நிரம்பி விடுவதாக சொல்கிறார் சுரேஷ். இவரது முயற்சியைப் பாராட்டி இதனை விரிவுபடுத்தும் விதமாக தொழிற்சாலையின் நிறுவனர் இந்தியா முழுவதும் உள்ள அவரது மற்ற ஏழு நிறுவனங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருக்கிறார்.சுரேஷின் நண்பர்கள் அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களிலும் இந்த மழை நீரை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள். குறைந்துவரும் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க மழைநீர் சேமிப்பு ஒரு மாபெரும் தீர்வு. மழைத்துளி நம் உயிர் துளி போன்றது அதனை தொழிற்சாலையில் செயல்படுத்தி மழைநீரை சேமிக்கும் சுரேஷின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

Also See...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்