கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலம்... கொலையில் முடிந்த 2 மாத காதல்...!

  • News18
  • Last Updated: December 22, 2019, 12:01 PM IST
  • Share this:
வேலூர் அருகே கல்குவாரியில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அவரது காதலனும் நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் இருந்து கடந்த புதன் கிழமை பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வேலூரை அடுத்த அரியூர் காவல்நிலைய எல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுமி எனத் தெரியவந்தது


பிளஸ் டூ முடித்து விட்டு வேலூர் சிஎம்சி உணவகத்தில் அவர் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், தனது பையில் பள்ளிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு சென்றுள்ளார்

பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்கு செல்வதாகக் கூறி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டார் சிறுமி

சிறுமி சடலம் கிடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது செல்போனை போலீசார் கண்டெடுத்தனர்.சிறுமியின் செல்போனில் கடைசியாகப் பேசியது யார் என ஆய்வு செய்தபோது வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 23 வயதான பிரகாஷ் என்பவர் எண் பதிவாகியிருந்தது

அவரைப் பிடித்து விசாரித்தபோது தான்தான் சிறுமியைக் கொலை செய்ததாக ஒப்புதல் அளித்தார். ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷுடன் கடந்த 2 மாதங்களாகப் பழகி காதலித்து வந்துள்ளார் சிறுமி. தன்னைத் திருமணம் செய்யும்படியும் பிரகாஷை வலியுறுத்தி வந்துள்ளார்; ஆனால் சிறுமிக்கு பல நபர்களுடன் பழக்கம் இருப்பதை பிரகாஷ் அறிந்து கொண்டார்.

அதனால் திருமணம் செய்ய முடியாது என மறுத்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, வேலுார் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஆட்டோவில் பெருமுகை கல்குவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரகாஷ்

அங்கு பேசிக் கொண்டிருந்த தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி வலியுறுத்தியுள்ளார். பிரகாஷ் அதை ஏற்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

ஆத்திரத்தில் பிரகாஷ், சிறுமியை மேலிலிருந்து கல்குவாரியில் தள்ளி விட்டுள்ளார். கீழே விழுந்தவேகத்தில் சிறுமியின் தலையிலும் மற்ற இடங்களிலும் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

ஆத்திரத்தில் தான் கொலை செய்ததை உணர்ந்த பிரகாஷ், தனது நண்பர் நவீனை அழைத்து நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

நவீன் அளித்த ஆலோசனையின்படி, கல்குவாரி அருகிலேயே தனது உடைகளை எரித்த பிரகாஷ் அங்குள்ள குட்டையில் குளித்து விட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்

செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில் பிரகாஷ் சிக்கியுள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் பிரகாஷுடன், குற்றத்தை மறைத்ததாக அவரது நண்பர் நவீனும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொண்டு சென்ற பையை மூலக்கொல்லையில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர். 2 மாதக் காதல் இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம், வேலுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: December 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்