கோவையை அடுத்தநவக்கரையில் நேற்று ரயில் மோதியதில் 3 காட்டு யானைகள் உயிரிழந்தன. அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட்டது யானை மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகியோரை தமிழக வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் இயக்கப்பட்ட வேகம் குறித்து விசாரணைக்காக தமிழக வனத்துறை அதிகாரிகள் பாலக்காடு சென்றபோது கேரள ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
தமிழக வனத்துறையில் பணிபுரியும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காட்டில் உள்ள ரயில்வே காவல்நிலையத்தில் சிறைபிடித்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ரயில் இஞ்சினில் இருந்து வேகம் கண்டறியும் கருவியை கழட்டியதாகவும், அதனால் தமிழக வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் மிரட்டியதுடன் காவல் நிலையத்தில் சீருடையுடன் உட்கார வைத்தனர்.
முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு வன ஊழியர்கள் சிறை பிடிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் தமிழக வனத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கோவை வன ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக கேரள மாநில உயர் அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதனிடையே தமிழக வனத்துறை ஊழியர்கள் சட்ட விரோதமாக கேரள போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்பின் சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மலையாளி சமாஜத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து மலையாளி சமாஜ் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து மலையாளி சமாஜம் அலுவலகம் அருகே வந்த கட்சியினர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அதிகாரிகளை சிறைபிடித்த கேரள ரயில்வே போலீசாரை கண்டித்து காந்திபுரம் 100 அடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள், கேரள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு இருந்த தமிழக வன ஊழியர்கள் 6 பேர், 4 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே விரைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபைர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Thiruvallur