• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை! பொள்ளாச்சியில் ஒரு ஆண்டில் ஆறு யானைகள் உயிரிழப்பு

கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை! பொள்ளாச்சியில் ஒரு ஆண்டில் ஆறு யானைகள் உயிரிழப்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் இல்லாததால் கடந்த ஆண்டில் மட்டும் 6 யானைகள் மற்றும் ஒரு கடா மான் உயிரிழந்துள்ளன.

பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி மற்றும் காடம்பாறை என 6 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடிகள், மான், காட்டு மாடுகள் என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி வனப்பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் தற்போது 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வனப்பகுதியில் சவாரி அழைத்து செல்லவும், ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த யானைகளை பராமரிக்க அதே பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வேட்டை தடுப்பு காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யானைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து தகுந்த மருத்துவம் செய்ய கால்நடை மருத்துவர்கள் இல்லை. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பிடிப்பட்ட சின்னத்தம்பி, கடந்த மாதம் பிடிப்பட்ட அரிசி ராஜா போன்ற யானைகள் கூட உடல் மெலிந்து சோர்வுற்ற நிலையில் உள்ளன.

கடந்த மாதம் பெருமாள் சாமி கோவில் அடிவாரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குட்டியானை தகுந்த சிகிச்சை இல்லாததால் உயிரிழந்தது. வால்பாறையில் ஒரு குட்டி யானைக்கு காலில் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட 10 நாட்கள் சரியான உணவு கிடைக்கமாலும், மருத்துவச் சிகிச்சை கிடைக்காமலும் உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் இருந்திருந்தால் இந்த யானைகளை காப்பாற்றியிருக்க முடியும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, கோரிக்கை மனு அளித்தால் கால்நடை மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதன் பிறகாவது, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவரை நியமனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see:


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: