திருட்டு மின்சாரம்... ஆயுதபூஜை ஆரவாரம்... மின்சாரம் தாக்கி பலியானது நிறைமாத பசுமாடு

சென்னையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் ஆட்டோ ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் ஒரு நிறைமாத பசுமாடு மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருட்டு மின்சாரம்... ஆயுதபூஜை ஆரவாரம்... மின்சாரம் தாக்கி பலியானது நிறைமாத பசுமாடு
பசு மாடு - கோப்பு படம்
  • Share this:
பாட்ஷா படத்தில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்ற பாடலை ஒலிக்கவிட்டு ஆயுத பூஜை வெகு விமர்சையாக கொண்டாடுவதுபோல தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளின் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.  அப்படி சென்னையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் ஆட்டோ ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் ஒரு நிறைமாத பசுமாடு மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை கீழ்பாக்கம் லாக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன்(52). இவர் தனது வீட்டில் 15 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் அருகிலுள்ள தோப்புக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்ப்பாக்கம் லாக்நகர் அடுத்த குட்டியப்பன் தெரு பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டிருந்தினர். இதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மின் இணைப்பானில் சட்டத்துக்கு புறம்பாக மின் இணைப்பை திருடி ஆயுத பூஜைக்கான அலங்காரம் மற்றும் ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து ஞாயிற்று கிழமை மாலை ஆயுதபூஜையை வெகு விமர்சயாக கொண்டாடியுள்ளனர்.

ஆனால், ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு பிறகு மின் இணைப்பானிலிருந்து மின்சாரம் எடுத்த வயர்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.


இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மாடுகள் அருகிலுள்ள தோப்புக்கு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுதபூஜையை கொண்டாடிவிட்டு அப்படியே விட்டு சென்ற மின்சார வயருக்கு அருகே இருந்த ஒரு சில புற்களை மேய்வதற்கு நிறைமாத பசுமாடு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கருவுற்ற நிறைமாத பசுமாடு துடிதுடித்து இறந்துள்ளது.

இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் ரகுநாதன் ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட தலைவர் மனோகர் மற்றும் நிர்வாகிகள் மீது அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை செயலக காலணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜாக்ரதையாக ஆயுதபூஜையை கொண்டாடி விட்டு அப்படியே சாலையில் விட்டு சென்ற மின்சார வயர்களை ஏதேனும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் மிதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? அஜாக்கரதையாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading