தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வந்த மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
மேலும், தண்டவாளத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த, காலை காலை 9.20 மணியிலிருந்து 12 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு மீண்டும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின் தேங்கியிருந்த நீருக்கு வடிகால் ஏற்படுத்தியும், ராட்சத நீரேற்றும் இயந்திரம் மூலமும் வெள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு 5 மணிக்கு மீண்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது.
இதனால், ஒரே நாளில் இரண்டு முறை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டு பின் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.