வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மனம் குளிரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதி கபிலர்மலை தேர்தல் பிரசசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: "பரமத்திவேலூர் தொகுதிக்குட்பட்ட ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் இளைய நாயக்கனாருக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.4000 நிவாரணமாக வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி பெண்களுக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், குடிமராமத்து திட்டம், கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரடியாகச் சென்று மனுக்கள் பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சுமார் 5 லட்சம் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போகும் இடங்களில் பெட்டியை வைத்துக்கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அந்தப் பெட்டியை கொண்டு போய் வீட்டில் வைத்து திறந்து பார்த்து குறை தீர்ப்பாராம். அதிமுக ஆட்சியில் அவர் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார்? துணை முதல்வராக இருந்தபோது இதுபோன்று மனுக்கள் வாங்காதது ஏன்? மக்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு மனுக்களை வாங்கி செல்கிறார்.
தற்போது நவீன உலகமாக மாறிவிட்டது. 1100 என்ற எண்ணை செல்லிடப்பேசியில் அழைத்து தங்களுடைய கோரிக்கைகளை பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பெட்டியை வைத்துக்கொண்டு மனுக்களை வாங்குவது வேடிக்கையாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் மனம் குளிரும் வகையில் அறிக்கைகள் வெளிவரும். திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும். அதையெல்லாம் நம்பி ஏமாந்து விட வேண்டாம். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கபிலர்மலை தொகுதி எனக்கு பிடித்தமான ஒன்று. இங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் அறிந்தவர்களே. வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு உங்களுடைய வாக்குகளை செலுத்துங்கள் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM Palanisamy