தமிழகத்தில் இதுவரையில் 411 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேராள, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தீவிரமான பிரச்சாரத்தை தொடங்கின. தேர்தல் ஆணையமும் தங்களுடைய தீவிரப் பணியைத் தொடங்கின. பணப்பட்டுவாடா தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தன. பணம் மற்றும் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆரம்பம் முதலே, ஐந்து மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக அளவில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுவந்தன. இந்தநிலையில், பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ‘கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வரை, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் ₹815 கோடி மதிப்பிலான பணம், இலவசப் பொருட்கள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் ₹411 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 105 தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகம். தமிழகத்திற்கு அடுத்த படியாக மேற்கு வங்கத்தில் ₹257 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.