அ.தி.மு.க.வில் டிசம்பர் மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தல் - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

அஇஅதிமுக அலுவலகம்

அ.தி.மு.கவில் டிசம்பர் மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சித் தெரிவித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  • Share this:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும் கட்சியின் சட்ட திட்டங்களின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் தற்போது அதுபோன்று அ.தி.மு,கவில் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அ.தி.மு.க சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை எனவும் சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க தலைமையின் இந்த போக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது என்வும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம். பலமுறை புகார் அளித்தும் அந்த புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை எனவும் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனதிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் முன் இன்று  விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஏன் அ.தி.மு.கவை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அ.தி.மு.கவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, இந்த வழக்கில் அ.தி.மு,கவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
Published by:Karthick S
First published: