ELECTION CODE OF CONDUCT WHAT IS THE PROCEDURE TO BRING MONEY SKD
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: பணம் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள் என்ன?
மாதிரி படம்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி எடுத்துச் செல்லலாம்? என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுப்பதற்காக, காவல்துறை, துணை ராணுவம், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் ஆணையக் குழுவினர் கூட்டாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்களோ, வியாபாரிகளோ, அரசியல் கட்சியினரோ 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ரொக்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல், வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் கட்சி போஸ்டர்கள், மதுபானம், பரிசு பொருட்கள் போன்றவற்றின் மதிப்பும் 10 ஆயிரத்தை தாண்டக்கூடாது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள், தங்களது தனிப்பட்ட செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்றாலும், அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். வங்கிகள் தொடர்பாக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், உரிய ஆவணங்களுடன், சந்தேகம் ஏற்படாத வகையில் இருந்தால் மட்டுமே அவை பறிமுதல் செய்யப்படாது.
அதே நேரத்தில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமான வங்கிப் பண பரிவர்த்தனைகள் ரிசர்வ் வங்கி உதவியுடன் கண்காணிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் குறித்து 24 மணி நேரத்தில், அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டால், அவை 24 மணி நேரத்திற்குள் சிறப்புக் குழுவின் அனுமதியுடன் விடுவிக்கப்படும். ஒருவேளை ஆவணங்கள் காட்டப்படவில்லை என்றால், காவல்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபடுவார்கள்.