மாணவர்களுக்கு வழங்கவிருந்த முதல்வர் படம் போட்ட ஸ்கூல் பேக் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி நடவடிக்கை

தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பள்ளியிலிருந்து பிற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல்வர் படம் போட்ட புத்தகப்பைகளை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

 • Share this:
  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பள்ளியிலிருந்து பிற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல்வர் படம் போட்ட புத்தகப்பைகளை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

  திருச்சியில் 74 மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்களுடன் கூடிய புத்தகப்பைகள் , ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவை வழங்கப்படவிருந்தது .

  இந்த ஆண்டு இந்தப் பைகளை வழங்குவதற்காக ஆட்டோக்களில் எடுத்துச் செல்லப்பட்டன. இதை திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் பள்ளியை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.

  மேலும் இவர்கள் பறக்கும்படை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  அப்போது இங்கு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளதால் இந்த பைகளை மற்ற பள்ளிகளுக்கு அனுப்புமாறு அதிகாரிகள் தெரிவித்தனர் என்றனர்.

  இதனையடுத்து புத்தகப் பை பண்டல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  இந்த மாநகராட்சிப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு பண்டல்களை அனுப்பியுள்ளனர். யாருக்கும் விநியோகிக்கவில்லை. அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து சீல் வைத்து விடுவோம் என்று பறக்கும்படையினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

  இதற்கிடையில் பறக்கும்படை சோதனையில் பல்வேறு இடங்களில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  பறக்கும் படை இவ்வாறு பல இடங்களில் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த காரில் ரூ.51 லட்சத்து 36 ஆயிரம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

  உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடலூர், தேனி, கள்ளக்குறிச்சியிலும் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
  Published by:Muthukumar
  First published: