Home /News /tamil-nadu /

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பட ரீலிஸ் நிகழ்வுகளிலும், சூட்டிங் ஸ்பாட்டிலும்தான் இருக்கிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பட ரீலிஸ் நிகழ்வுகளிலும், சூட்டிங் ஸ்பாட்டிலும்தான் இருக்கிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக காவல் ஆணையத்தின் நிலைமை என்ன? காவல் துறையினருக்கு பணிச்சுமையை குறைக்க இந்த அரசு என்ன செய்து இருக்கின்றது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பட ரீலிஸ் நிகழ்வுகளிலும் சூட்டிங் ஸ்பாட்டிலும்தான்  இருக்கின்றார், பள்ளிகளின் பக்கம் அவர் செல்வதில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கின்றார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர். இதற்காக டெல்லி ஸ்தம்பிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 2000 கோடி சொத்து இருக்கும் அந்த நிறுவனத்தை  தனிநபர்களுக்கு கையகப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெறுகின்றது.

சோனியா, ராகுல் காந்திக்கு 83 சதவீதம் பங்கு இருப்பதால் இது குறித்து அமலாக்க பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு தனமாக நடந்த விடயத்தை விசாரிக்கும் போது ராகுல் காந்தி, சோனியா காந்தி திசை திருப்புகின்றனர்.

நான் மின்துறை குறித்து பொய்யான தகவலை சொல்வதாக செல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என தெரிவித்த அவர், ஆளுகின்ற திமுக அமைச்சர்கள் பேசுவது அடுப்புகரி, சட்டியை பார்த்து நீ கருப்பு என சொல்வதை போன்றது.

பா.ஜ.க தொண்டர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி, குண்டர்கள் என்று சொல்வது நகைச்சுவை என தெரிவித்த அவர், மாத மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

திமுக விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்கின்றார்களா? எல்லோருக்கும் தெரியும் படி திமுகவினர் ஊழல் செய்கின்றனர் என தெரிவித்த அவர், நியூட்ரிசியன் கிட் டெண்டர் ஏன் இதுவரை திறக்கப்பட வில்லை என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஏன் சமீபகாலமாக செய்தியாளர்களை சந்திக்க வில்லை எனக்கூறிய அவர், தமிழக காவல் ஆணையத்தின் நிலைமை என்ன? காவல் துறையினருக்கு பணிச்சுமையை குறைக்க இந்த அரசு என்ன செய்து இருக்கின்றது?

ஆளும் கட்சியின் தலையீட்டை கட்டுப்படுத்த முதல்வர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்? காவல் நிலையங்களில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும், இது குறித்து துறை அமைச்சரான தமிழக முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சாத்தான்குளம் விவகாரத்தை திமுக அரசியல் நிகழ்ச்சியாக மாற்றியது என கூறிய அவர், இப்போது நாங்கள் தவறை மட்டுமே கேட்கின்றோம் எனவும்  காவல் துறை செயலின்மை என்பது அதிகரித்துள்ளது, பல் பிடுங்கப்பட்ட பாம்பாக தமிழக காவல் துறை இருக்கின்றது எனவும் குற்றம்சாட்டினார். திமுகவின் அரசியல் தலையீடு சரி செய்யப்பட்டால் இது சரியாகிவிடும் எனக்கூறிய அவர், காவல்நிலையங்களை தமிழக முதல்வர் ஆய்வு செய்ய ஆரம்பித்ததில் இருந்துதான் இந்த சம்பவங்கள் அதிகரிக்கின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

இதை படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

கோவையில்  திமுக கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்து விடும் அளவிற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் இருக்கின்றது என தெரிவித்த அவர், தமிழகத்தில் கஞ்சா வளர்ப்பை இந்த அரசு வளர்த்து இருக்கின்றது. கஞ்சா உட்பட அனைத்து போதை பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையாளர்களின் வருவாய் அதிகரித்துள்ளது,  டிவிட் போடுபவர்களின் மீது குண்டாஸ் போடும் காவல் துறை , கஞ்சா வியாபாரிகளின் மீது குண்டாஸ் போடுவதில்லை .

மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என யார் கொண்டு வந்தாலும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும், அதற்கு பா.ஜ.க துணை நிற்கும் என தெரிவித்த அவர், அனைத்து கட்சி கூட்டத்திலும் பா.ஜ.க இதை தெளிவுபடுத்தி இருக்கின்றது. மேகதாதுவிற்கு குறுக்கே அணை கட்டுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்பதை திடீர் தலைவராக ( அன்புமணி ராமதாஸ்) சுற்றுபயணம் மேற்கொள்ளும் தலைவர் இதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், மேகதாதுவில் மூன்று மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது எனவும் தெரிவித்தார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் கருத்தை தமிழக அரசு செயல்படுத்துகின்றது. அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பா.ஜ.கவிற்கு  கிடையாது, பா.ஜ.கவை வளர்க்க நாங்கள் பாடுபடுகின்றோம். கருத்தியல் அடிப்படையில் தமிழக அரசியல் நகர்கின்றது, முக்கியமான கட்சிகள் ஒரு பாதையில் இருக்கின்றன, நாங்கள் எங்கள் கருத்தியல் அடிப்படையில் தனியாக செயல்படுகின்றோம், எல்லா விவகாரங்களிலும் பா.ஜ.க வின் கருத்து வித்தியாசமாக இருக்கின்றது, திமுகதான் எங்களை செயல்பட வைக்கின்றது.

Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர், பா.ஜ.கவும் தங்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைப்பதிலும் தவறில்லை..  தனி மனிதர்கள் (சசிகலா) பா.ஜ.க கட்சியில் இணைப்பது என்ற விவகாரங்களில் கூட்டணி கட்சியான அதிமுகவின் மனது புண்படும்படி பா.ஜ.கவின் செயல்பாடு இருக்காது.

தமிழக அரசில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை, அமைச்சர்களை மாற்றினால் எதாவது பலன் இருக்கும். கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் சம்மந்தப்பட்டு இருக்கின்றார், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் இருத்தது, இப்போது எங்கே இருக்கின்றது?

தமிழகத்தில் லூலூ மால் வந்தால் யார் பாதிக்கப்படுவார்கள்,  கம்யூனிஸ்ட்டுகள் ஏன் லூலூ மால், ஜி ஸ்கொயர் பற்றியெல்லாம்  பேசுவதில்லை?

சேகர் பாபு அரசியல் லாபத்திற்காக சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தில் செயல் படுகின்றார். நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது ஏன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் என்பதை சேகர் பாபு விளக்க வேண்டும்?

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தாய் மொழி கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பட ரீலிஸ் நிகழ்வுகளில், சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றார். பள்ளிகளின் பக்கம் அவர் செல்வதில்லை. பள்ளிகல்வித்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கின்றார் அன்பில் மகேஷ் என்று அவர் குற்றம்சாட்டினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Annamalai, BJP, DMK

அடுத்த செய்தி