Home /News /tamil-nadu /

''பாஜகவின் கைவிரல் நுனியில் ஆடும் பொம்மையாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி'' : முத்தரசன் விமர்சனம்

''பாஜகவின் கைவிரல் நுனியில் ஆடும் பொம்மையாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி'' : முத்தரசன் விமர்சனம்

முத்தரசன்

முத்தரசன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கூவத்தூரில் நடந்த நாடகங்களை யாரும் மறந்திருக்க முடியாது.- முத்தரசன்

  எடப்பாடி பழனிசாமி அதிகாரத்தில் அமர்ந்து பாஜக மத்திய அரசின் ''கைவிரல் நுனியில் ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக'' ஆடிய அவலத்தை என்றும் மறக்க இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
  இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

  "பத்தாண்டு கால இடைவெளிக்கு பிறகு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளையும், நிர்வாகத்தையும் தேர்வு செய்யும் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அஇஅதிமுக சுயநல ஆதாயம் தேடும் குறுகிய நோக்கத்தில் நடத்தவில்லை என்பதை நாடறியும்.

  அஇஅதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தவர், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக அவருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கூவத்தூரில் நடந்த நாடகங்களை யாரும் மறந்திருக்க முடியாது.

  எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரத்தில் அமர்ந்து பாஜக மத்திய அரசின் ''கைவிரல் நுனியில் ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக'' ஆடிய அவலத்தை என்றும் மறக்க இயலாது. வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி சக்திகளின், சுயநலக் கும்பலின் கைகளில் சிக்கி சீரழிந்து வரும் ஜனநாயகத்தை மீட்க திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உதயமானது.

  இதையும் படிங்க - 'நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்?' - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் உணர்வுகளை பிரதிபலித்து ''இந்தியா காப்போம் தமிழகத்தை மீட்போம்'' என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர் அரசியல் இயக்கங்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் பேராதரவு கொடுத்து ஜனநாயக வாழ்வை மீட்டெடுத்தனர்.

  முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிர்வாகத்தையும் சமூக நீதி கொள்கை வழியினையும் நாடும் மக்களும் பாராட்டி ஆதரித்து வருகின்றனர். புதிய ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 19.02.2022ஆம் தேதி நாம் வாக்களித்து பிரதிநிதிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தை செயல்படுத்தும் நாளாகும். வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் முன்பு வாழ்க்கை அனுபவத்திலிருந்து நல்ல முடிவுகளை எடுத்திடுவோம்.

  இதையும் படிங்க - 'துண்டுச் சீட்டு இல்லாமல் நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா?' - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

  நகர்மயமாகி வருவதில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. இன்றுள்ள விபரப்படி 49 சதவீத மக்கள் நகர்ப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். கடந்த அஇஅதிமுக ஆட்சி காலத்தில் நகரமைப்பு தொடர்பாக சரியான கொள்கையும் பார்வையும் இல்லாததால் பெரும்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், போக்குவரத்து இணைப்பு, இணைப்புச் சாலை, சுகாதார வசதி ஏதுமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

  'ஸ்மார்ட் சிட்டி' என்ற 'பொலிவுறு நகரம்' என்பது முந்தைய ஆளுங்கட்சியினரின் ஊதாரித்தனத்துக்கும், ஊழலுக்கும் சாட்சியாக விளங்கி வருகின்றன. வீடில்லாதோர், குடிசைகளில் வாழ்வோர், வேலை தேடி அலைவோர், தெருவோர வியாபாரிகள் என அமைப்புசாராப் பகுதியினரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்லாட்சி நகர்ப்புற உள்ளாட்சியிலும் அமைந்திட திமுகழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவோடு களம் இறங்கியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திமுகழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மற்ற தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து ஆதரிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது''
  இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.
  Published by:Musthak
  First published:

  Tags: Local Body Election 2022

  அடுத்த செய்தி