இந்தக் கை மண்வெட்டி பிடித்த கை: எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன் - பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்

இந்தக் கை மண்வெட்டி பிடித்த கை: எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன் - பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

இந்தக் கை மண்வெட்டி பிடித்த கை, எதைக் கண்டும் அஞ்சமாட்டேன் என்று பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தருமபுரி மாவட்டம் அரூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து மொரப்பூர் பேருந்து நிலையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் அதிமுகவையும், கூட்டணி தலைவர்களையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னை யாருக்கும் தெரியாது என தெரிவித்தார். தற்போது தினமும் என் பெயரை ஸ்டாலின் உச்சரித்து வருகிறார். நான் கிராமத்தை சார்ந்தவன், விவசாயி, ஒன்றும் தெரியாது. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணினார். இதை கண்டு நம்ம ஆட்களே ஒரு மாதிரியாகிவிட்டார்கள். ஆனால் அதிமுக மீண்டும் அதிக இடங்களை பெற்று ஆட்சியமைக்கும். ஸ்டாலின் எண்ணம் நல்லவையில்லை. அதிக கெட்ட எண்ணம் பிடித்தவர்.

    திமுக தலைவர் கொஞ்சம், நஞ்சமில்லை, ஏராளமான கஷ்டங்களை கொடுத்தார். நான் மக்களை நம்பி இருக்கிறேன். இந்த கை மண்வெட்டி பிடித்த கை, எதையும் கண்டு அஞ்சமாட்டேன்.

    ஸ்டாலினுக்கு திறமை, உழைப்பு இல்லை. இரண்டும் இல்லையென்றால் எப்படி வரமுடியும். உழைப்பவர்கள் மட்டுமே உயர்வு பெறுவார்கள். சொந்த முயற்சி வேண்டும். யாரோ எழுதி கொடுப்பது வைத்து, இறவல் வாங்கி அரசியல் நடத்த கூடாது. எதிலும் நம்பிக்கை வேண்டும், யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை தான் பலம்.

    திமுக கட்சி மக்களை சுரண்ட வேண்டும் என்பதற்காகவே இருக்கிறது. திமுக வரலாறை புரட்டி பாருங்க, திமுகவில் சாதாரணமான ஒருவர் எம்எல்ஏ, அமைச்சராக முடியாது. இப்ப கூட, 20 வாரிசுகளுக்கு சீட் கொடுத்துள்ளனர். திமுகவை பற்றி செல்போன் வைத்திருக்க மக்களுக்கு தெரியும். எங்களை விட அதிக திறமை கொண்டவர்கள் மக்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் சொன்னார், என் குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று, ஆனால் இப்ப அவர் மகன் வந்துவிட்டார். மாநில, மத்திய எந்த தேர்தலாக இருந்தாலும், அவர் குடும்பத்தினர் தான் பதவிக்கு வரவேண்டும். கண்ணுக்கு தெ‌ரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் செய்தார்கள் என்றால், டெல்லியிலும் ஊழல் செய்தார்கள். டெல்லியில் திமுகவின் பெயரை கேட்டாலே அலறுகிறார்கள். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழலே உருவானது. ஸ்டாலின் இதே இடத்திற்கு வரட்டும், நேருக்கு நேராக வரட்டும். கேள்வி கேட்கட்டும், நான் பதில் சொல்றேன், நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லட்டும். மக்களே நீதிபதியாக இருக்கட்டும்.

    புதிய தலைமைச் செயலகம் ஒப்பந்தம் 210 கோடி. ஆனால் பணம் கொடுத்தது 400 கோடி. இந்த ஊழலுக்கு விசாரணை நடத்தினால், நீதிமன்றம் சென்று தடை பெறுகிறார்கள். இதில் 110 சதவீதம் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒப்பந்தம் இணையதளத்தில் நடைபெறுகிறது. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும். இதே நிறுவனத்திற்கு திமுகவினர் 8 ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். அது பெட்டியில் போட்டு வாங்கியுள்ளனர். இந்தியாவில் தமிழகம் நீர்மேலாண்மையில் முதலிடம் பெற்று விருது வாங்கியது. இதுவரை விவசாயிகளுக்காக எந்த முதல்வரும் வரவில்லை. ஏனென்றால் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பற்றி யாருக்கும் தெரியாது. நான் விவசாயி என்பதால், எனக்கு தெரிந்தது’ என்று தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: