திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க 5-02-2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில், 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் இணைப்பு பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், பொதுத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிகளுக்கான அறிவிப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் இணைப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதனையடுத்து, இதைக் கண்டித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். கல்வியில் புரட்சி செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. பள்ளிக்கல்விக்கு உயர் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியவர். அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக விழுப்புரத்தில்
ஜெயலலிதாவின் பெயரில் புதிதாக பல்கலைக்கழகம் தொடங்கினோம். ஆளுநர் அனுமதி அளிக்கிறார். ஆனால் தேர்தல் அறிவிப்பு காரணமாக பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், தொடராது எனவும், அதற்கு மாற்றாக ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம். ஜெயலலிதாவின் பெயர் இருப்பதால் அதை தாங்கிக் கொள்ள முடியாததால் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.