சோதனையும், வேதனையும்தான் திமுகவின் 100 நாள் சாதனை - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக கூறுவது போல தேர்தல் அறிக்கைக்கும், கொடநாடு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை.

 • Share this:
  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சோதனையும் வேதனையும்தான் திமுகவின் 100 நாள் சாதனை என்று விமர்சித்துப் பேசினார்.

  அரசியல் காழ்ப்புணர்வுடன் கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடத்தப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.

  2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சயான் என்பவரிடம் நீதிமன்ற அனுமதியின்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆளுநரை சந்தித்தனர்.

  அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில், சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்.

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பொய்யான வழக்கை அதிமுகவினர் மீது போடுகின்றனர். திமுகவின் குறிக்கோள் ஊழல், வசூல், பழி வாங்குதல் போன்றவை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உயரதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பணி இட மாற்றம் செய்ததும், வசூலும்தான் திமுகவின் 100 நாள் சாதனை.

  கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஆளுங்கட்சியினர் தற்போது முடக்கி வைத்துள்ளனர். திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவானதை மறைக்க முயல்கின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி மீது திட்டமிட்டு சோதனை நடத்தி அவதூறு பரப்புகின்றனர்.

  கொடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணை முடியவுள்ள தருணத்தில் மறு விசாரணை ஏன்? திமுக கூறுவது போல தேர்தல் அறிக்கைக்கும், கொடநாடு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த குற்றப் பின்னணி உடையவர்கள்.

  திமுக ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன் ஏற்கனவே குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடியுள்ளார். அரசு குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக ஐயம் ஏற்படுகிறது. நீதிமன்ற அனுமதி பெறாமல் அரசின் தலையீட்டால் மறுவிசாரணை நடத்தப்படுகிறது. சட்டப்பிரிவு 313 அடிப்படையில் குற்றவாளிகளிடம் விசாரணை முடிந்த பிறகு திட்டமிட்டு மறு விசாரணை நடத்துகிறார்கள். 3 முறை உயர்நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டது.

  Must Read : குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கையாகிவிட்டது, நீட் தேர்வு தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்திலே ரத்து ஆகும் என்றார்கள், அதை நிறைவேற்றவில்லை. பத்திரிகை சுதந்திரத்தை மீறி, நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மறு விசாரணைக்கு எந்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்? மக்களுக்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்தாமல் சோதனை செய்து வருகின்றனர். நாள் தோறும் கொரோனா பரவலை நாங்கள் கண்காணித்தோம். தற்போது 1,800க்கும் மேல் தொற்று பதிவாகிறது. எண்ணிக்கையும் மறைக்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவு 90க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி என்பது தவறான அணுகுமுறை என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: