தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தேனி மாவட்ட அ
திமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அதிமுக தோல்விக்கு கட்சி பிளவுபட்டிருப்பதுதான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேசப்படுவதாகவும், எனவே பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பேசப்பட்டதாக கூறப்பட்டது.
அதன்படி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்து அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால்தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொண்டர்கள் வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அதிமுக தலைமை சரியில்லை என்றும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், அதிமுக தோல்விக்கு, அனைவரும் தனித்தனியாக இருந்ததே காரணம் என்றும் கூறினார்.
Must Read : அதிமுக தலைமை சரியில்லை... சசிகலாவை இணைக்க வேண்டும் - ஆறுகுட்டி அதிரடி
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.