Home /News /tamil-nadu /

பொதுச்செயலாளர் பதவி ஏன்? நீதிபதியின் கேள்விகளால் இ.பி.எஸ்ஸுக்கு சட்ட ரீதியில் பின்னடைவா?

பொதுச்செயலாளர் பதவி ஏன்? நீதிபதியின் கேள்விகளால் இ.பி.எஸ்ஸுக்கு சட்ட ரீதியில் பின்னடைவா?

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து வேகமெடுத்து அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டத்தை ஜூன் 23-ம் தேதி நடத்துவதற்கு அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார். அப்போது, அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியது. அ.தி.மு.கவின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரண்டனர். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் வழக்கத்தைவிட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜூன் 23-தே பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் தீர்மானம் கொண்டுவரப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பொதுச் செயலாளர் தீர்மானம் கொண்டுவருவதற்கு தடைவாங்கினார். அதனையடுத்து, ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அதுதான் அ.தி.மு.க இடியாப்பச் சிக்கலில் சிக்குவதற்கான தொடக்கமாக அமைந்தது.

பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று வாதிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால், அதேநேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதியாகவில்லை என்றும் வாதிட்டது.

அதேநேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில், ‘2021-ம் ஆண்டு டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி வேண்டுமானால் காலாவதியாகியிருக்கலாம். 2017-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டபடி செப்டம்பர் வரை பதவிக்காலம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது.

உடனடியாக ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், இந்தமுறை பொதுக்குழுக் கூட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வத்தால் தடை வாங்க முடியவில்லை. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதற்கான சட்ட அங்கீகாரம் என்ன என்பது கேள்வியாகவே இருந்தது.

முறைப்படி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதா? பொதுச்செயலாளர் பதவிக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஒரு புறத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தையும், ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியிலிருந்து மாறி மாறி நீக்கிக் கொண்டனர்.

இதற்கிடையில் வருவாய்துறையால் சீல்வைக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகத்துக்கு உரிமைகோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த வழக்கில், உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு சாவியை வழங்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்று முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓ.பன்னீர் செல்வம்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ‘பொதுக்குழு நடைபெற வேண்டுமா, கூடாதா என ஜூலை- 6-ம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும், ஆனால் தங்கள் தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து மனுக்களையும், உயர்நீதிமன்றம் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடமே வந்தது. அவர், ‘பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகவே இரண்டு முறை உத்தரவிட்டுள்ளார். எனவே, மீண்டும் அவரிடம் வழக்கு வந்தது ஓ.பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதனையடுத்து, கிருஷ்ணன் ராமசாமியை இந்த வழக்கிலிருந்து மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமை நீதிபதி பண்டாரியிடம் முறையிட்டார். அதனையடுத்து, கிருஷ்ணன் ராமசாமி தாமாகவே இந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். அதனையடுத்து, இன்று புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தங்களது அரசியல் செயல்பாடுகளை தீவிரமாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த டி.டி.வி.தினகரன் தற்போது தன்னுடைய நிலைப்பாடுகள் குறித்தும், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவரது நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்திவருகிறார்.

ஆங்கில ஊடகத்துக்கு டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில், ‘ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட டெல்லி தரப்பில் விரும்பினார்கள்’ என்று தெரிவித்துள்ளார். மறுபுறம், அ.தி.மு.கவின் முதல் எம்.பி மாயத் தேவரின் இறப்புக்குச் சென்றிருந்த சசிகலா, ‘அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். 2024-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.கவை வெற்றி பெறச் செய்வேன். அ.தி.மு.கவின் பிளவுக்கு தி.மு.கவே காரணம். பா.ஜ.க காரணம் இல்லை’ என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் நால்வரும் ஒவ்வொரு பாதையில் பயணித்தாலும், அனைவரும் பா.ஜ.க ஆதரவு என்ற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்.

இதற்கிடையில் இன்று நடைபெற்ற உயர் நீதிமன்ற விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக நீதிபதி சராமாரியாக கேள்வியை எழுப்பினார். இன்றைய விசாரணையின்போது, ‘பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறித்தானே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று கூறிய நிலையில், அந்த பதவியைக் கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது ஏன் என்பதை விளக்க வேண்டும். பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா எனவும் விளக்க வேண்டும். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் இரு பதவிகள் தேர்தல் செல்லாது என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா? நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா? என்று சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்சிப் பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லையென்றால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.

தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுவந்த எடப்பாடி பழனிசாமி இந்த கேள்விகள் சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் பார்வை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்ல வாய்ப்புள்ளதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். எனினும் உச்ச நீதிமன்ற முறையீட்டுக்கான வாய்ப்புகள் இரு தரப்புக்குமே உள்ளது. அ.தி.மு.க விவகாரம் விரைவில் முடிந்துவிடப்போவதில்லை.
Published by:Archana R
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

அடுத்த செய்தி