தேர்தல் நேரத்தில் மட்டுமே ஸ்டாலின் மக்களைச் சந்திக்கிறார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தேர்தல் நேரத்தில் மட்டுமே ஸ்டாலின் மக்களைச் சந்திக்கிறார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவரோ, மக்களோ கோரிக்கை வைக்காமலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை தரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, உரையாற்றிய அவர் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார். கடந்த காலங்களில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது எனக் கேட்ட முதலமைச்சர், அதிமுக சார்பில் பொதுமக்களிடம் வாங்கிய 9 லட்சம் மனுக்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களுக்கு தீர்வு அளித்திருப்பதாக தெரிவித்தார். திமுகவில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், தன் அனுபவத்தை வயதாக கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை விமர்சிப்பதாகவும் சாடினார்.

  அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், 1100 உதவி எண் மூலமாக இதுவரை 55 ஆயிரம் புகார் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், மு.க.ஸ்டாலின் இனி பெட்டி வைத்து மனுக்களை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

  பின்னர், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், இத்தனை ஆண்டுகளாக மக்களை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து வருவதாகவும் விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவரோ, பொதுமக்களோ கோரிக்கை வைக்காமலேயே மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மக்கள்தான் முதலமைச்சர் என்றும், அவர்களுடைய உத்தரவையே தான் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: