ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜி ஸ்கொயர் விவகாரத்தில் விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்கு- எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

ஜி ஸ்கொயர் விவகாரத்தில் விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்கு- எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி

விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மேலும், பிரபல வார இதழான ஜூனியர் விகடன், யூட்யூபர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளும் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜி ஸ்கொயர் என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 21-5-2022 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. மேலும், இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல், வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது, இதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்புகிறது. ஜூனியர் விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோரது பெயர்களைக் கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்றிருக்கலாம்.

  அது உண்மையா என்று விசாரித்திருக்கலாம். ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

  முதல் தகவல் அறிக்கையில் 3-வது குற்றவாளியாக ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல்துறைக்கு உரிமை வழங்கி உள்ளது.

  இந்தப் பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டத்திற்கு உரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள், அதிகார மமதையின் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி, வாய்பொத்தி, தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது.

  இந்த விடியா அரசின் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை வாய்மூடி, கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை பார்க்கும்போது,

  ‘நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்'

  என்ற பாரதியாரின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை பற்றி நான் ஏற்கெனவே பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பத்திரிக்கை அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். ஆளும்கட்சியின் அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். ஈசிஆர் சாலை ஜி ஸ்கொயர் சாலை என்ற பெயர் சூட்டி இருக்கலாம் என்று கூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன்.

  தமிழகத்திலுள்ள நிலம் மற்றும் மனை விற்பனையாளர்கள் தற்போது எந்த பத்திரப் பதிவு மேற்கொள்ள முடியாத இருண்ட சூழ்நிலையில் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், தினமும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பத்திரப்பதிவு நடவடிக்கை மட்டும் கன ஜோராக நடைபெற்றுவருகின்றன.

  இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், ஜூனியர் விகடன் பத்திரிக்கை மீதும் ஊடகவியலாளர்கள் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் கூட்டாக ஒரு வழக்கைப் பதிவு செய்கிறது. ஒருவேளை அவர்கள் பத்திரிக்கை தர்மத்தை மறந்து அத்துமீறி இருந்தால் கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ சிவில் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், வேண்டுமென்றே அவர்களை சிக்க வைப்பதற்காக கிரிமினல் வழக்கினை ஜி ஸ்கொயர் நிறுவனம் பதிவு செய்கிறது.

  ஒரு தலைக் காதல்: கல்லூரி மாணவியை வழிமறித்து விஷத்தை வாயில் ஊற்றி கொன்ற இளைஞர்கள்?- திருச்சியில் கொடூரம்

  அதிகார மமதையின் உச்சத்தில், ஊடகங்களை அச்சத்தில் அழுத்தலாம் என்று ஆளும் தி.மு.க அரசு நினைக்கும் என்றால் பத்திரிக்கைகளின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றால் அதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

  காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Annamalai, Edappadi Palaniswami