முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது எந்தவொரு பணியையும் செய்யாமல், தற்போது அதிமுக செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை வேண்டுமென்றே விமர்சனம் செய்து வருவதாக சாடினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான பாதையில் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும், தமிழகத்தில் ஏழை மக்கள் இல்லாத நிலையை உருவாக்க அதிமுக அரசு போராடி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.