• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ''இனிமேலாவது ஸ்டாலின் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்'' : எடப்பாடி பழனிசாமி

''இனிமேலாவது ஸ்டாலின் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்'' : எடப்பாடி பழனிசாமி

ரெட் அலெர்ட் வந்தவுடனேயே திமுக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ராட்சத மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றியிருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

 • Share this:
  இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

  சென்னை மாநகரம் முழுவதும் நேற்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வடசென்னை திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர் திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.

  இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதலமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக மகாகவி பாரதியார் நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

  இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோன்று கோயம்பேடு அஜீஸ் நகர் பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

  எங்கள் ஆட்சியின்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே திட்டமிட்டு, எந்தெந்த வார்டுகளில், வீதிகளில் தண்ணீர் தேங்கும் என்பதை அறிந்து முன்னேற்பாடுகளை செய்து, மழை பெய்தவுடன் அங்கிருக்கும் தண்ணீர் அகற்றப்படும். ஆனால் திமுக அரசு திட்டமிடாமல் செயலாற்றுகிறது.

  இப்போதே அரசால் மழையை சமாளிக்க முடியவில்லை. இந்த வடகிழக்கு பருவமழை சுமார் ஒன்றரை மாதகாலம் தொடரும். இன்னும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக அரசின் மெத்தனப்போக்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரெட் அலெர்ட் வந்தவுடனேயே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை திமுக அரசு செய்திருக்க வேண்டும். ராட்சத மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றியிருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

  எங்கள் ஆட்சியின்போது, பருவமழை தொடங்கும் முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தொடங்கி விடுவோம். இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது.

  மக்களுக்கு உணவில்லை. குழந்தைகளுக்கு பால் இல்லை. முதியோர்கள் அவதிப்படுகிறார்கள். மின்சாரம் கிடையாது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  நாளை திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Abdul Mushtak
  First published: