தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இந்நிலையில் அவர் உள்பட தேனி மாவட்டத்தில் போட்டியிடும் 4சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் போடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். போடி தேவர் சிலை அருகே திறந்த வேனில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாக நின்று பிரச்சாரம் செய்தனர்.
பரப்புரையை முடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு சென்று தேநீர் அருந்திவிட்டு சென்றார். அப்போது அங்கு இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மா ஓ.பழனியம்மாளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆசீர்வாதம் பெற்றார்.
மேலும் ஓ.பிஎஸ்-ன் குடும்பத்தினருடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை தற்போது ஓ.பி.எஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், எனது பாசத்திற்குரிய அப்பத்தா ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார் என ஜெயபிரதீப் பதிவிட்டுள்ளார்.
செய்தி : பழனி குமார், தேனி செய்தியாளர்