பைன் பியூச்சர் நிதி நிறுவன வழக்கு... 47 பேருக்கு தலா 5 லட்சம் பக்கங்களுடன் குற்றபத்திரிகை...!

மோசடி வழக்கில் கைதானவர்கள்

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பைன்பியூச்சர் என்ற நிதி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களிடம் நிதியை பெற்று மோசடி செய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் பைன்பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக , குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கு தலா 5 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்க 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பொருளாதார குற்றபிரிவு போலீசார் உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பைன்பியூச்சர் என்ற நிதி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களிடம் நிதியை பெற்று மோசடி செய்தது. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். சுமார் 818 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்று இருந்தது.

கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நிதி நிறுவன மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவனத்தின் உரிமையாளர் விவேக், அவரது சகோதரர் நித்தியானந்தன், நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், ஆடிட்டர் சத்தியலட்சுமி மற்றும் ஏஜென்டுகள் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர்.

புகார் அளித்தவர்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் குற்றப்பத்திரிக்கை மட்டுமே சுமார் 5 லட்சம் பக்கம் வரை ஆவணங்கள் இருக்கிறது எனவும், இவற்றை பேப்பர் வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  தர இயலாது எனவும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்க முடியும் என  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த பைன் பியூச்சர் நிறுவனத்தினர் ,  தங்களுக்கு டிஜிட்டல் வடிவிலான குற்றப்பத்திரிக்கை வேண்டாம் எனவும் பேப்பர் வடிவிலான குற்றப்பத்திரிக்கை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் டிஜிட்டல் வடிவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய  சட்டத்தில் இடமில்லை எனவும் வாதிட்டனர்.

இதனை ஏற்று கொண்ட கோவை  முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி  பைன்பியூட்ச்சர் நிதி நிறுவன உரிமையாளர் விவேக், நித்யானந்தன் உட்பட 47 பேருக்கும்  பேப்பர் வடிவிலான குற்றபத்திரிக்கையினை வழங்கவேண்டும் என உத்திரவிட்டார்.

இந்நிலையில் தற்போது குற்றபத்திரிகையினை நகல் எடுக்கவே அதிக தொகை தேவைப்படும் நிலையில் செய்வதறியாது கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர். நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தாக 25289 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகார் மனுவும் நான்கு பக்கம் வரை இருக்கின்றது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட  ஒருவருக்கு வழங்கப்படும்  குற்றபத்திரிகை மட்டும் 5 லட்சம் பக்கங்கள் கொண்டதாக இருக்கின்றது. இதை நகல் எடுக்க 2.66 லட்சம் செலவாகின்றது. ஒருவருக்கு குற்றபத்திரிகை பேப்பர் மூலம்  தயார் செய்து கொடுக்க 2.66 லட்சம் தேவைபடும் நிலையில் 47 பேருக்கு குற்றப்பத்திரிகை தயார் செய்ய 1.25 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. இவ்வளவு பெரிய தொகை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இல்லாத நிலையில், பைன் பியூச்சர் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்ய 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

Also read... திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ எம்.பிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன்...!

கோவையில் உள்ள அதிகாரிகள் இதற்கான கடிதத்தை சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். சென்னையிலிருந்து உரிய நிதி வந்தவுடன் குற்றவாளிகள் 47 பேருக்கும் தனித்தனியாக ஐந்து லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்து கொடுக்க பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மிகப்பெரிய மோசடி வழக்கில் மிகப்பெரிய அளவிலாக பக்கங்களுடன் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்படுவது குறிப்பிடதக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: