சட்ட மன்ற தேர்தலில் 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது - தேர்தல் ஆணையம் விளக்கம்!

சட்ட மன்ற தேர்தலில் 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது - தேர்தல் ஆணையம் விளக்கம்!

மாதிரி படம்

தேர்தல் நாளில் கொரோனா தாக்கம் அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 15 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதற்றமான தொகுதிகளை கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும். வாக்குபெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விடாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் அல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும் என வாதிட்டார். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்கான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திர பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளதாகவும், 2019 மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு அறையில் தாசில்தார் ஒருவர் சென்றதால் நடவடிக்கைக்கு உள்ளானதையும் சுட்டிக்காட்டி, ஜாமர் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்றும், ஆனால் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் எனவும் அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

மதுரை தொகுதி பாதுகாப்பு அறைக்குள் தாசில்தார் சென்றாரே தவிர எதிலும் மாற்றம் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து பதற்றமான வாக்குச்சாவடிகளை காண்டறிய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

வாக்குப்பதிவுக்கு முன்பாகவும் மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பது, அங்கீக்ரிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியல், விவிபேட் இயந்திரங்களை அதிகரிப்பது, தேர்தலுக்கு பிறகு பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்துவது ஆகிய மனுதாரரின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதற்றமான தொகுதிகளை கண்டறிய மார்ச் 26 ஆம் தேதி 12 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.

மேலும், தேர்தலுக்கு முன்பாகவே மின்னனு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்கு இயந்திரங்களை வை- ப்பை மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது என்பதால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவி பொருத்த அவசியமில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த மையங்களில் மின் கசிவு மூலமாக ஏற்படும் தீ விபத்தை தவிர்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகப்பு மையங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Also read... சென்னையில் தங்க நகை பட்டறையில் 22 பேருக்கு கொரோனா...!

11 ஆயிரத்தும் மேற்பட்ட பதற்றமான வாக்குசாவடிகள் முழுமையாக இணையதளம் முலமாக நேரலை செய்யப்படும் எனவும் ஆனால் பாதுகாப்பு கருதி வேட்பாளர்கள் அல்லாமல் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே இந்த நேரலையை பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் நாளில் கொரோனா தாக்கம் அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். அதேபோல சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்து திமுக'வின் வழக்கு முடித்து வைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: