80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர், வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இரண்டாவது நாளான இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப்பின் தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நாட்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமேஷ் சின்ஹா, தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், தமிழக தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், முகவரி மாற்றம் செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களா என்பதை கவனமாக கண்காணித்து அத்தகைய வாக்காளர்களையும் பட்டியலில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்று திறனாளிகள் வர ஏதுவாக சாய்வு தளம், வீல் சேர் வசதி, காத்திருப்பு அறை, கழிவறை, குடிநீர் வசதி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1000 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு அருகாமையில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோயாளிகளை வாக்குச்சாவடிக்கு நேரில் வர வேண்டும் என கட்டாயபடுத்த முடியாது எனவும், 80 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்கள் அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாக்குகள் பெற ஏற்பாடு செய்யப்படும். அரசியல் கட்சிகள் விரும்பினால் தங்கள் பிரதிநிகளை உடன் அனுப்பலாம் என கூறினார்.
வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க விரிவான திட்டங்கள் வகுக்கப்படும். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது ,பொருள் வழங்குவது, மதுபானம் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலம் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10% வரை கூடுதலாக செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர் .
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை பொறுத்து உரிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
Also read... துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரி வழக்கு- அரசு பதிலளிக்க 15-ம் தேதிவரை அவகாசம்
மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த ஒருவர் கூட நீக்கப்படமாட்டார்கள் என உறுதி அளித்த அவர், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கை புத்தகமாக வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்துவாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேடு , வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.