Home /News /tamil-nadu /

கிழக்குக் கடற்கரை சாலைக்கு  'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிழக்குக் கடற்கரை சாலைக்கு  'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் - முதல்வர் அறிவிப்பு

கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் - முதல்வர் அறிவிப்பு

ECR Road | "சென்னை முதல் மாமல்புரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச்சாலைக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை ' என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"அடுத்த 10 ஆண்டில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது, 2026 க்குள் தரைப்பாலங்களற்ற மாநிலமாக தமிழகம் மாறும் என  நெடுஞ்சாலைத்துறை பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.46 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மத்திய கைலாஷ் மேம்பாலம்,  ரூ.199 கோடியே 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்க  37 கோடி ரூபாய் மதிப்பில்  கண்ணாடி இழை நடைமேம்பாலம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னையில் ஆழ்வார்பேட்டை,  தேனாம்பேட்டை பகுதியை அண்ணா சாலையில் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு , பாண்டிபஜார் சாலை,  செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு , சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் 4 வழித்தடங்களில் ரூ.485 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள மேம்பாலங்களின் கிராபிக்ஸ் காணொலிகள் ஒளிபரப்பபட்டன.

 முதலமைச்சர் பேச்சு

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தான் மனதில் நினைப்பதை சொல்லாமலேயே , தனது கண் ஜாடையிலேயே தெரிந்து கொண்டு செயலாற்றுவதில் முன்னிலையில் எ.வ.வேலு இருக்கிறார் என கருணாநிதியே பாராட்டியுள்ளார்.

எ.வ.. என்றால் எதிலும் வல்லவர் என்று அர்த்தம். அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் 2 ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும், சாலை சரியில்லை என்றால் வாகனத்தில் செல்வோர் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசுக்கு  நல்ல பெயரும், அவப் பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும்.

தமிழ்நாடு இந்தளவிற்கு வளர்ச்சி பெற நெடுஞ்சாலைத்துறையே காரணம். உலகத் தரம் வாய்ந்ததாக கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மாற வேண்டும். முதலமைச்சரானவுடன் 5 சாலைகளின் நெரிசலை குறைக்கும் விதமாக அண்ணா மேம்பாலத்தை கட்டினார் கருணாநிதி.

இதையும் படிங்க - மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்… போலீசில் பிடிபட்டது எப்படி?

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம், கிராமங்களை நகரங்களுடன் இணைக்க கிராமப்புற சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளை கருணாநிதி உருவாக்கினார். தமிழகத்தில் 1000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதில் தாமதம், சுணக்கம் ஏற்படாமல் இருக்கிறது. இதை சரிசெய்ய  184 பணி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு திட்டம் சிறப்பாக இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் மாவட்ட தலைமை மற்றும்  வட்டத்  தலைமையிடங்களை இணைக்கும் விதமாக  2200 கி.மீ தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் 10 ஆண்டில் , போக்குவரத்துச் செறிவைப் பொருத்து 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

1281 தரைப்பாலங்கள் ரூ.2,400 கோடிக்கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக   640 தரைப்பாலங்கள் ரூ.610 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன.

இரண்டாம் கட்டமாக 430 தரைப்பாலங்கள்  ரூ.1,100 கோடிக்கு மேல் செலவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன.
2026க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும் என்றார்.

தொடர்ந்து, சென்னையிலிருந்து மாமல்புரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை ' முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை ' என பெயர் மாற்றப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திமுகவின் ஆட்சியில் 1971ல் நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளி விழாவும், 1991ல் பொன் விழாவும் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. 2022ல் ஸ்டாலின் தலைமையில் பவள விழா நடைபெறுகிறது. துறையின் நூற்றாண்டு விழாவும் ஸ்டாலின் தலைமையிலேயே நடைபெற வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் துறையாக நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது. கடந்த ஓராண்டு செயல்பாட்டின் மூலம்,  இந்தியாவிலேயே முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராக இருக்கிறார். எங்கள் துறை மூலம் முதலமைச்சரின் ஆட்சிக் கட்டிலுக்கு முடிந்தளவு சிறப்பு சேர்ப்போம்.

குறுக்கு வழி பிடிப்பதில்லை சாலைகளுக்கு , நேர் வழியிலே செல்லும் நெடுஞ்சாலை. தேசமெங்கும் உள்ள சாலைகளுக்கு பிடித்த நிறம் திராவிட கருப்பு நிறம்தான். மனித ஒப்பனை பிறரை கவர்வதற்கு, சாலைகளின் ஒப்பனை பிறரை பாதுகாப்பதற்கு,  10 மாதம் நம்மை தாய் சுமந்தாலும், நியாயப்படி பார்த்தால் நம்மை நெடுங்காலம் சுமப்பது நெடுஞ்சாலைதான் என்று அவர் கூறினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு

மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக துணை சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை கட்டித்தருவது நெடுஞ்சாலைத்துறை. நீலகிரி மாவட்டத்தில்  யானைகள் கடந்து செல்லும் விதமாக தனி சாலை ஒரு இடத்தில் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் நூற்றாண்டு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்பார் என்றார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு

கடலை கட்டாந்தரையாக்கி  ஜாவா,  சுமத்ரா,  கடாரம் என பல இடங்களுக்கும் சென்றோர் சோழர்கள். நொபுரு கரோஷிமா அகில  உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக இருந்து ராஜேந்திர சோழனின் கடற்பயணம் குறித்து தொகுத்துள்ளார். சாலைகளால் மனித சமூகம் செம்மையடைகிறது.

தரமான சாலைகள் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பல பணிகளை நெடுஞ்சாலைத்துறை முன்னெடுத்து வருகிறது.

தமிழகத்தில் அனைத்து சாலைகளிலும், மேல் பரப்பை சுரண்டி விட்டுத்தான் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற முதல்வரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: MK Stalin

அடுத்த செய்தி