Home /News /tamil-nadu /

மின்னணுக் கழிவுகளைப் பெற சென்னை மாநகராட்சித் திட்டம்! பொதுமக்களிடம் அமோக வரவேற்பு

மின்னணுக் கழிவுகளைப் பெற சென்னை மாநகராட்சித் திட்டம்! பொதுமக்களிடம் அமோக வரவேற்பு

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக சென்னை மாநகராட்சியில் மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பயன்பாடற்ற மின்சாதனப் பொருட்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி, கணினி, டியூப்லைட் போன்ற பயன்பாடற்ற மின்சாதனங்களை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகளிடம் கொடுக்கும்போது அவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.

அதிலுள்ள நச்சுத்தன்மையால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்கள், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவான்மியூர், அடையாறு, கோட்டூர்புரம் ஆகிய கோட்டங்களில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் கடந்த 16-ம் தேதி முதல் மின்னணுக் கழிவுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழுதடைந்த மின்னணு உபகரணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர்.

பொதுமக்களிடம் பெறப்படும் மின்னணுக் கழிவுகள் உரிய முறையில் மாசு கட்டப்பாடு வாரிய அனுமதியுடன் செயல்படும் நிறுவனங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படும். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், மின்னணுக் கழிவுகளைப் பெறும் திட்டம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இத்திட்டம் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see:


 
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி