பத்திரப் பதிவுத் துறையில் ஆண்டுதோறும் துறை ரீதியாக தணிக்கை துறையினர் தணிக்கையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் தணிக்கையில் ஈடுபட்டபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று, அலுவலகம் இரண்டு மற்றும் நல்லுார், அவினாசி, பல்லடம் மற்றும் காங்கேயம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் இ-சலான் மூலம் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. வாடிக்கையாளர்கள், அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர் மூலம் செலுத்திய முத்திரைக் கட்டணங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டிருந்தன. அந்தக் கட்டண ரசீதுகள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்திய நிலையில் தான் இ - சலான் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடி குறித்து அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், திருப்பூர் இணை அலுவலகம் ஒன்றில் 24 லட்சம் ரூபாய், திருப்பூர் இணை அலுவலகம் இரண்டில் 30 லட்சம் ரூபாய், தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 18 லட்சம் ரூபாய் நல்லுார், அவினாசி, பல்லடம் மற்றும் காங்கேயம் ஆகிய அலுவலகங்களில் தலா 10 முதல் 15 லட்சம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் உதவி சார்பதிவாளராக பணியாற்றி வரும் விஜயசாந்தி, திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் இரண்டில் உதவி சார்பதிவாளராகப் பணியாற்றி வரும் முத்துக்கண்ணன் மேலும் திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றி வரும் சங்கர், இளநிலை உதவியாளரான மோனிஷா திருப்பூர் இணை சார்பதிவாளர் அலுவலகம் இரண்டின் உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகிய 5 பேர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி அரங்கேறியது எப்படி என நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர்கள் குழு நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகின. நகரின் மத்தியில் நீண்ட காலமாக காலியாகவுள்ள, 50 சென்ட் இடத்துக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பு என்று தோராயமாக முதலில் மதிப்பிடுவார்கள். அந்த மதிப்பிற்குரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணத்தை வாடிக்கையாளர் முதலில் செலுத்துவார்.
பின்னர் சார்பதிவாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து உண்மையான சந்தை மதிப்பை நிர்ணயம் செய்வார்கள் அந்த உண்மையான சந்தை மதிப்பிற்கான முத்திரைத் தாள் கட்டணம், குறைவு முத்திரைக் கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வித்தியாசத் தொகையை வாடிக்கையாளர் பத்திரப் பதிவுத் துறையின் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது பற்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால், அதையும் பத்திர எழுத்தர்களே தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்துவார்கள். அதற்குத் தனியாக கட்டணம் சேர்த்து மொத்தத் தொகையையும் வசூலித்து விடுவார்கள். அப்படி செலுத்தப்பட்ட தொகைக்கான ரசீது ஸ்கேன் செய்யப்பட்டு ஆவணமாக இணைக்கப்படும். அசல் ரசீதுகள் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
இந்த ரசீதுகளை வைத்துதான் சார்பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளர்கள் விளையாடி உள்ளார்கள். சார்பதிவாளரின் யூசர் நேம், பாஸ்வேர்டு உதவியாளர்களுக்குத் தெரியும்.
இன்னும் சில பயனர்களுக்கு ஜிமெயில் சரியாக வேலை செய்யவில்லை: கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?
அவற்றை வைத்து அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரங்களில், அந்த ரசீதுகளை ரத்து செய்வார்கள்.ரத்து செய்யப்பட்ட உடன் அந்தக் கட்டணம், பணத்தை செலுத்திய பத்திர எழுத்தரின் வங்கிக் கணக்கிற்குத் திரும்பச் சென்று விடும். அந்தப் பணத்தை பத்திர எழுத்தர்களும், சார்பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளர்களும் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தின் பல சார்பதிவாளர் அலுவலகங்களில், இ - சலான் மோசடி அரங்கேறியுள்ளது. இப்படி ஒரு மாவட்டத்திலேயே ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி அரங்கேறியதைப் பார்க்கும்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
திருப்பூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த இ - சலான் மோசடி வெளியானதை அடுத்து, பொதுமக்களிடம் தாங்கள் செலுத்திய நிலுவைத் தொகை குறித்த அச்சம் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற மோசடி பல ஆண்டுகளாக நடந்திருந்தால் மோசடித் தொகை பல கோடியைத் தாண்டும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.