பொங்கல் திருநாளன்று எஸ்.பி.ஐ கிளார்க் முதன்மைத் தேர்வு நடத்துவதாக எஸ்.பி.ஐ தேர்வு வாரியம் அறிவித்தமைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஸ்டேட் வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, 5,486 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலை தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட முதன்மை தேர்வு வருகிற 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளில் (ஜன.15) முதன்மை தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக உழவைப் போற்றும் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை மதிக்காமல் தேர்வை பொங்கலன்று நடத்துவது தொன்று தொட்டு வழக்கில் உள்ள தமிழரின் மரபையும், பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயல் என்று வாலிபர் சங்கம் கருதுகிறது. தேர்வை பொங்கல் அன்று நடத்துவது மேலும் தமிழகத்தின் இளைஞர்களுக்கான வங்கி வேலைவாய்ப்பை மறைமுகமாக பறிக்கும் சதியோ என்று வாலிபர் சங்கம் சந்தேகிக்கிறது.
இதுகுறித்து மதுரை நடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும் தேதி மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே எஸ்.பி.ஐ தேர்வு வாரியம் தேதியை மாற்றிட முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய அழுத்தம் கொடுத்து தேர்வு நாளை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Exam