Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை

 விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி

விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி

அதிமுக முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்.ஈ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அரசு விதிகளை மீறி தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள வேலுமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், 3ஆவது முறையாக வேலுமணி இல்லத்தில் சோதனை நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வதாக தகவலறிந்த வேலுமணி ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

குறிப்பாக தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு, கடந்த மே 2019 ஆம் ஆண்டு மற்றும் ஜூலை 2020 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2 புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பழைய தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவது தொடர்பான விவகாரத்தில் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், எந்தவித சட்டமன்ற உறுப்பினரும் இந்த திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காகவும் அப்போதைய முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட செய்தது தெரியவந்துள்ளது.

Also read: தெருவிளக்கு திட்டத்தில் முறைகேடு.. ரூ.500 கோடி இழப்பு? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத்தில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதற்காக மாநில அளவிலான கமிட்டியை உருவாக்கி அதில் மாவட்ட அளவிலான டென்டர்களை தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு பெற்று தந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக 20 வாட் மற்றும் 90 வாட் எல்இடி பல்புகள் வாங்குவதற்காக டெண்டரில் பங்கு பெறுவதற்கான தகுதி இல்லாமல், இந்த தொழில் தொடர்பான தொடர்பு இல்லாத பல்வேறு நிறுவனங்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி டெண்டர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

டெண்டர் பெறப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேசிபி இன்ஜினியர்ஸ், சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன்ஸ், ஜெனரல் இன்விரோ டெக், ஆர்.கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ, ஏக்டெக் மிஷனரி components, ராஜராஜேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன், சபரி எலக்ட்ரிகல்ஸ் ஸ்ரீ கணேசன் டிரேடர்ஸ், திருமுருகன் எலக்ட்ரிகல்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட பினாமி நிறுவனங்களுக்கு சாரகமாக டெண்டர் ஒதுக்கீடு தெரியவந்துள்ளது.

இதுபோன்று பினாமி நிறுவனங்களுக்கு சாதகமாக டெண்டர் ஒதுக்கீடு செய்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊரக வளர்ச்சித் துறைக்கு சுமார் ரூ.500 கோடி அளவில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருந்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு Essentiality Certificate வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் இன்று காலை முதல் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிமுக முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள் ரொக்கம் கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:

அடுத்த செய்தி