• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோலாகலமாக நடந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

கோலாகலமாக நடந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

காளி வேடமிட்டு வரும் பக்தர்.

காளி வேடமிட்டு வரும் பக்தர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், விஜயதசமியை முன்னிட்டு, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கடற்கரையில் நடந்தது, இதில், 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து விஜயதசமியை கொண்டாடினார்கள். 

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் தசரா பெருந்திருவிழா கடந்த 10 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. தினசரி இரவில், அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகரமாக, மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி விஜயதசமி அன்று நள்ளிரவில் நடைபெற்றது. 9 நாட்களாக விரதமிருந்த முத்தாரம்மன், சிங்க வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு புறப்பட்டுச் சென்றார். கடற்கரை அருகே சிதம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து சூரன் கடற்கரைக்கு வந்தார்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் ஆர்ப்பரிக்க, கடற்கரையில் சூரனை சிங்கம், யானை, சேவல் வடிவங்களில் அம்மன் எதிர்கொண்டார். இறுதியில் சூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். அதையடுத்து அம்மன், சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் கடலில் புனித நீராடினர். முன்னதாக அம்மனுக்கு விரதமிருந்த பக்தர்கள், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் காளிவேடங்களிட்டு பக்திப் பரவசத்துடன் ஆடிப்பாடி கோவிலுக்கு வந்தனர். காளிவேடம் மட்டுமின்றி பெண்வேடம், குரங்கு, புலி உள்ளிட்ட மிருகங்களின் வேடங்களிட்ட பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் குலசை நகரத்தை வலம் வந்தனர்.

    பல்வேறு தசராக்குழுக்களின் சார்பில் நடனக்குழுக்களும் வரவழைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவையொட்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குற்றங்களைத் தடுக்கும் வகையில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: