ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி: போஸ்மார்டத்தில் ஆண் குழந்தை இருந்தது கண்டுபிடிப்பு

கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி: போஸ்மார்டத்தில் ஆண் குழந்தை இருந்தது கண்டுபிடிப்பு

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மதுரை அருகே அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமன் - ராமுத்தாய் தம்பதி. இவர்களுக்கு, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராமுத்தாய் 4-ம் முறையாக கருவுற்றார். 7 மாதங்கள் ஆன நிலையில், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமுத்தாய் பரிசோதனைக்கு சென்றார். 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4வதும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார் ராமுத்தாய். 7 மாதங்கள் ஆன நிலையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும், முறையாகப் பரிசோதனை செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே வழி என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

  அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஜோதி லட்சுமி, ராமுத்தாயை அணுகி, 3 குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்துள்ளதால், 4வதும் பெண்ணாகத் தான் பிறக்கும் என்று கூறி, கருவைக் கலைக்க தான் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார். ராமுத்தாய், தனது தம்பியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கி ஜோதிலட்சுமியிடம் கொடுத்துள்ளார்.

  ஜோதி லட்சுமி, ராமுத்தாயை தொட்டப்பநாயக்கனுாரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார்

  ராமுத்தாயிடம் தான் எதுவும் கூறவில்லை என்றும் அவரே முடிவெடுத்து இந்த விபரீதத்திற்கு ஆளாகி விட்டார் என்று கூறுகிறார் அவரது கணவர் ராமு. ராமுத்தாய் உயிரிழந்ததை அடுத்து, அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த செவிலியர் ஜோதிலட்சுமியைப் போலீசார் கைது செய்தனர்.

  ராமுத்தாயின் அறியாமையைப் பயன்படுத்திப் பணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முயன்றதாக ஜோதி லட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். மருத்துவர் அல்லாத ஒருவர் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 314, கருக்கலைப்பு தடைச்சட்டத்தின் 5வது பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜோதிலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமுத்தாயின் சடலம் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வின் போது ராமுத்தாயின் வயிற்றில் ஆண் சிசு இருந்ததாக தெரியவந்துள்ளது.

  Published by:Saroja
  First published:

  Tags: Abortion, Usilampatti