திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக துரைமுருகன் தெரிவித்தார்,

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு
துரைமுருகன் - டி.ஆர்.பாலு
  • Share this:
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்றவர்கள் யாரும் போட்டியிடாததால், இருவரும் அந்த பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானதால், அந்த பதவி காலியானது. இந்த பதவிக்கு போட்டியிடும் துரைமுருகன், ஏற்கெனவே தாம் வகித்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம், அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகன், பிற்பகலில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்,


வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு போட்டியாக மற்ற யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வாகின்றனர். இருவருக்கும் திமுகவினரும், அதன் தோழமைக் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவானபோது, பேரறிஞர் அண்ணா அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அடுத்து நாவலர் நெடுஞ்செழியன், அதன் பிறகு பேராசிரியர் க.அன்பழகன் அந்த பொறுப்பை வகித்தனர். அதிகபட்சமாக க.அன்பழகன் 43 ஆண்டுகளாக அந்த பதவியில் நீடித்தார். தற்போது நான்காவதாக துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்துள்ளார்.

இதேபோல், திமுகவில் பொருளாளர் பதவி உருவானபோது, அந்த பொறுப்பை முதன்முதலாக வகித்தவர் கே.கே.நீலமேகம். பின்னர், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அடுத்தடுத்து பொருளாளராக பொறுப்பேற்றனர். அதன்பிறகு, க.அன்பழகன், சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி என கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த பதவியை அலங்கரித்தனர்.ஆற்காடு வீராசாமிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், அந்த பொறுப்பை ஏற்றார். பின்னர் ஸ்டாலின் திமுக தலைவரானதால், பொருளாளர் பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளதால், டி.ஆர்.பாலு திமுகவின் புதிய பொருளாளராகிறார்.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading