முழு ஊரடங்கு எதிரொலி; அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

கூட்ட நெரிசல்

சேலம், கோவை போன்ற பகுதிகளிலும் கொரோனா அச்சமின்றி காய்கறி சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் கூடிய பொதுமக்கள், வீட்டிற்கான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் முழு ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாஸ்மாக் மட்டுமின்றி சந்தை மற்றும் கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

  தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதையொட்டி காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்தும், ஞாயிறு இரவு 9 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மே 10 முதல் 24ம் தேதி வரையிலும், குறிப்பிட்ட கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதனை உணராமல் முழு ஊரடங்கு என அறிவிப்பு வெளியானதால், அச்சமடைந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளிலும், கடைவீதிகளிலும் குவிந்தனர்.

  திண்டுக்கல் கடை வீதியில் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் கடை வீதிக்குள் நுழைந்ததால், சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மளிகை, காய்கறிகளை வாங்க கடைகளில் கூட்டம் கூடியதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திணறினர்.

  திருச்சியிலும் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக மேலரண் சாலை, மயிலம் சந்தை பகுதிகளில் உள்ள எண்ணெய் விற்பனைக் கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

  இதேபோன்று சேலம், கோவை போன்ற பகுதிகளிலும் கொரோனா அச்சமின்றி காய்கறி சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் கூடிய பொதுமக்கள், வீட்டிற்கான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

  இதனிடையே, ஞாயிறு மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள சூழலிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் மொத்தமாக குவிந்தனர்.

  நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள், பெட்டி பெட்டியாக மதுபானனங்களை வாங்கிச் சென்றனர். சென்னை, தாம்பரத்தில் டாஸ்மாக் முன்பாக நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  கடலூரில் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியதால், கடைக்கு வெளியே தடுப்புகளை அமைத்து விற்பனை ஜோராக நடைபெற்றது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர், பைகளை கொண்டு வந்து மதுபாட்டில்களால் அவற்றை நிரப்பிச் சென்றனர்.

  இதேபோன்று, சேலம், காஞ்சிபுரம், தேனி, தருமபுரி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களிலும், சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
  First published: