ஆட்பற்றாக்குறை காரணமாக சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது என்று சிபிஐ தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் நீதிபதி மகாதேவன் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பாதுகாப்பு குறித்தும் அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் கொண்ட குழு கடத்தப்பட்ட சில சிலைகளை மீட்டு மீண்டும் தமிழக கோயில்களில் ஒப்படைத்து பாதுகாத்து வந்தது.
இதைத்தொடர்ந்து, ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு வழக்கு வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கினை விசாரிக்க முடியாது என்று சிபிஐ தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆட்பற்றாக்குறை காரணமாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க இயலாது என்று சிபிஐ அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கு தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுத்தது குறித்தும், சிபிஐ எழுதியுள்ள கடிதத்தின் சாரத்தை அறிந்து பதில் அளிக்க அவகாசம் தேவை என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Published by:Saroja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.