குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாளை ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடர் கன மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதாலும் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை(29.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் விடாமல் பெய்யும் மழை: இதுவரை 105 பேர் பலி.. மீட்பு பணியில் 54 படகுகள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமறை என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தொடர் கன மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி அறிவித்துள்ளார். தஞ்சாவூர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் , நாகப்பட்டினம், திருவண்ணாமலை , கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களுக்கு அறிவிப்பு செய்து விட்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் விடுமுறை
தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை(29ம்தேதி),நாளை மறுநாள்(30ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.