Home /News /tamil-nadu /

ஒற்றைத் தலைமை விவாதம்: பொதுக்குழு குழப்பம்; சசிகலா பேரணி- எதை நோக்கி பயணிக்கிறது அ.தி.மு.க?

ஒற்றைத் தலைமை விவாதம்: பொதுக்குழு குழப்பம்; சசிகலா பேரணி- எதை நோக்கி பயணிக்கிறது அ.தி.மு.க?

74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள நிலையில் 65 தலைமைக் கழக நிர்வாகிகள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள நிலையில் 65 தலைமைக் கழக நிர்வாகிகள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள நிலையில் 65 தலைமைக் கழக நிர்வாகிகள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க காரணம் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை குறித்த பெரும் பிரச்சனை. கடந்த வாரம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனால் அறிவிக்கப்பட்டது. இது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் இரு முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு தலைவர்களும் அ.தி.மு.க கட்சித் தலைமைக்காக போராடி வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா நேற்றைய தினம் மெகா பேரணியை மேற்கொண்டார். சென்னை, திருவள்ளூர், திருத்தணி ஆகிய இடங்களில் பொதுமக்களின் ஆதரவு திரட்டும் வகையில் சாலைப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரப் பயணங்களை மீண்டும் உருவாக்க முயலும் சசிகலா, தி.நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டார். சாலை பேரணியின் போது, ​​அவர் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். திருத்தணியில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கும்போது, ​​ஏழை, எளிய மக்களுக்காக கட்சியை உருவாக்குவதாக கூறியிருந்தார். ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க, ஜெயலலிதாவும் அதைத்தான் விரும்பினார் எனவும் கூறினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் காப்பது சசிகலாவின் பொறுப்பு என்றும் அதனால்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். மேலும், கட்சியில் நிலவும் பூசல் குறித்து பேசிய அவர், ‘என்னை பொறுத்த வரையில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனவே ஏழை, எளிய மக்களுக்கான அதிமுக ஆட்சியை விரைவில் கொண்டு வருவேன்’ எனக் கூறினார்.

உட்கட்சி பூசல் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து பேசிய சசிகலா, ‘கட்சியில் இரண்டு பேர் சண்டை போடுவதால், ஒட்டுமொத்த கட்சிக்கும் சிக்கல் என்று நினைக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். பேரணியின்போது தன்னிடம் கட்சியை வழிநடத்துமாறு தொண்டர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதுவே கட்சிக்கு நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் சசிகலா கூறினார். ‘மக்களவை தேர்தலுக்கு முன், அதிமுகவை ஒரே தலைமையின் கீழ் பார்ப்பீர்கள், அதை நிறைவேற்றுவேன்’ என சசிகலா தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்த பொதுக்குழுவில் ஒப்புதல் கிடைக்காததால் தற்போது கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுகிறது.

ஆனால், 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பதவிக் காலம் செப்டம்பர் வரை உள்ளது. எனவே, அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு விவரிக்கிறது. அதன்காரணமாக, தற்போது அ.தி.மு.கவின் தலைமைப் பதவியில் யார் இருக்கிறார் என்று அக்கட்சித் தொண்டர்களே குழம்பும் அளவுக்கும் வாதங்கள் நடைபெறுகின்றன.

இத்தகைய குழப்பங்களுக்கிடையே, ஒரே கட்சி ஆனால் பலவித கருத்து என்பதுபோல், எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்கள் தீர்மானிப்பார்கள் என ஓபிஎஸ் பேசிவருகிறார். என் தலைமையையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என சசிகலா பேசுகிறார். நமது பக்கம்தான் நியாயம், தர்மம் உள்ளது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறிவருகிறார். இதற்கிடையே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிலும் நேற்று வெளியான அறிவிப்பில் முதல்முறையாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இல்லாமல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டதால், இன்றைய கூட்டம் பெரிதும் உற்றுநோக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த போது அங்கிருந்த பேனரில் ஓபிஎஸ் புகைப்படத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். பின்னர், ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அப்போது அவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில் கழகத்தின் சட்டதிட்ட விதிகளில் இடம் இருக்கும் நிலையில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள நிலையில் 65 தலைமைக் கழக நிர்வாகிகள் வருகை தந்தனர். 4 பேர் கூட்டத்துக்கு வர முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். பன்ரூட்டி ராமச்சந்திரன் உடல்நிலை சரியில்லை என்று கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். 5 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பவது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேலும், நிறைய விவகாரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதெல்லாம் மிகவும் ரகசியமானது. இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்புகளாக வரலாமா கூடாதா என்று கட்சிதான் முடிவு செய்யும் என கூறினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பிரிவு 20 ஆ7-ன் படி ஒருங்கிணைப்பாளர் இல்லாத சூழலில் கட்சியை வழிநடத்த தலைமைக் கழக நிர்வாகிகள் அதிகாரம் பெற்றவர்கள். தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து அறிந்தும் அறியாமல் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் பேனரை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை நடைபெறுகிறது. துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து அ.தி.மு.கவிற்கு துரோகம் செய்துள்ளார். துரோகம் என்பது ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த ஒன்று. ஜூலை 11ஆம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்தை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பாரா என்பது குறித்து பொதுக்குழு முடிவு எடுக்கும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ ஓபிஎஸ் தரப்பு நாடினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by:Archana R
First published:

Tags: ADMK, AIADMK, OPS - EPS, Sasikala

அடுத்த செய்தி