தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிப்பகங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதை கைவிட வேண்டுமென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 5198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2050 மதுக்கடைகளுடன் குடிப்பகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக 2050 குடிப்பகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய குடிப்பகங்கள் பொதுவாக ஆளுங்கட்சி புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும். இத்தகைய சூழலில் தான் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட குடிப்பகங்களை மூடி விட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் குடிப்பகங்களை திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் இத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் குடிப்பகங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தானதாகும். தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் கணவர்களை இழந்து கைம்பெண்களாக வாடுவதற்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மதுக்கடைகள் தான். இந்தத் தீமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்கள் போராடி வருகிறார்கள். பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களால் தமிழ்நாட்டில் 4000&க்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டது வரலாறு ஆகும்.
Also Read : தமிழ்நாட்டில் ஊரடங்கு என்ற ஒன்று நடைமுறையில் உள்ளதா? - ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் காரணமாக மதுவுக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுச்சி காரணமாகத் தான் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை ரத்து செய்த கட்சியான திமுக, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. அப்போது மதுவிலக்குக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்த திமுக, இப்போது கூடுதலாக தனியார் குடிப்பகங்களை திறக்க முயன்றால் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். அதை பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் தனியார் குடிப்பகங்களை திறக்க உரிமம் வழங்குவது தேவையற்ற சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதுவரை நட்சத்திர விடுதிகளில் மட்டும் தான்குடிப்பகங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இப்போது விடுதிகளுடன் இணைக்கப்படாத தனியார் குடிப்பகங்கள் இணைக்கப்பட்டால் அவை இப்போது மதுக்கடைகளுடன் இணைத்து நடத்தப்படும் குடிப்பகங்களை விட மிகவும் மோசமாகத் தான் இருக்கும். அவை பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் தான் அமைக்கப் படும் என்பதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உருவாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனியார் குடிப்பகங்கள் அமைக்கப்பட்ட பின்னர் மதுக்கடைகளில் உள்ள குடிப்பகங்கள் மூடப்படும் என்று கூறப்பட்டாலும் அது சாத்தியமற்றதாகும். மதுக்கடைகள் இருக்கும் வரை அங்கு ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக மதுக்கடைகளை நடத்துவதை தடுப்பது என்பது இயலாத ஒன்றாகும். அதனால், ஒருபுறம் தனியார் குடிப்பகங்கள், இன்னொருபுறம் மதுக்கடைகளில் தொடரும் சட்டவிரோத குடிப்பகங்கள் என திரும்பும் திசைகள் எல்லாம் குடிமகன்களின் தொல்லை தலைவிரித்தாடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
Also Read : ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும் - சீமான்
இவை அனைத்தையும் விட, ஓர் அரசின் வருமானத்திற்காக மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் திறப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாததாகும். மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் தொழு நோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது என்று கூறி தமிழ்நாட்டில் மது விற்பனையை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவர் அறிஞர் அண்ணா. அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் தனியார் குடிப்பகங்கள் அனுமதிக்கப்பட்டால் அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் தனியார் குடிப்பகங்களை திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, PMK