Home /News /tamil-nadu /

வட்டி செலுத்தக்கோரி வங்கி ஊழியர்களின் நெருக்கடியால் ஓட்டுநர் தற்கொலை

வட்டி செலுத்தக்கோரி வங்கி ஊழியர்களின் நெருக்கடியால் ஓட்டுநர் தற்கொலை

Youtube Video

தேனி அருகே, கார் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தக் கூறி தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி அளித்ததாக குற்றம்சாட்டி கார் ஓட்டுநர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காவிடில் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    வங்கிக் கடனில் கார் வாங்கி முறையாக தவணை செலுத்தி வந்த ஓட்டுநர் முருகன், கொரோனால் தவணை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் அவருக்கு அளித்த நெருக்கடியில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 

    தேனி அருகே உள்ள அல்லி நகரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான முருகன். இவரது மனைவி பவுன் தாய். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு தேனியில் உள்ள HDFC வங்கியில் ரூ 9 லட்சம் கார் கடன் பெற்று அதில் புதிய கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வருமானமின்றி 6 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.

    கடந்த சில தினங்களாக HDFC வங்கி ஊழியர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தக் கூறி தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 5ஆம் தேதி அல்லி நகரம் வீரப்ப ஐயனார் மலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன்பு, மூத்த மகள் ரேணுகாதேவியிடம் பேசிய முருகன், தனது பேச்சை பதிவு செய்து வைத்துக் கொள்ளும்படி கூறி விட்டு தன்னை HDFC வங்கி ஊழியர்கள் டார்ச்சர் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் மலைக்கோவில் செல்லும் பாதையில் கார் நிற்கும் என்றும் கூறியுள்ளார். முருகனின் ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், அவரது உறவினர்கள், சனிக்கிழமை HDFC வங்கி முன்பு போராட்டத்தில் இறங்கினர்.

    முருகனைத் தற்கொலைக்குத் துாண்டியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் கூறினர். வீட்டு வாசலில் வைத்து தனது தந்தையின் ஜாதி குறித்து வங்கி ஊழியர்கள் அவதுாறாகப் பேசியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.

    போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர். வங்கி முன்பு போராட்டம் நடந்ததால், வங்கி சிறிது நேரத்தில் மூடப்பட்டது. போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து விளக்கம் அறிய வங்கி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் நமது செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை.


    கொரோனா காலகட்டத்திற்கான வட்டி வசூலில் மத்திய அரசு பல வழிகாட்டு நெறிமுறைகளை வங்கிகளுக்கு அளித்துள்ள நிலையில், நெருக்கடி காரணமாக கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    -------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Car, Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Theni

    அடுத்த செய்தி