மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரத்தில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திராவிட கழகத் தலைவர் கீ.விரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி முடிக்கும் மாணவர்கள் ‘‘ஹிப்போ கிரேட்டிக் உறுதிமொழி’’ எடுப்பது தொன்றுதொட்டு உலகளாவிய வழக்கமாகும். எங்கும் எதிலும் சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கலாச்சாரம் என்றே இயங்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு இந்த ஹிப்போகிரேட்டிக் உறுதி மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தில் மஹரிஷி சரக் சாபக் என்ற புது உறுதிமொழியை திணிக்க தேசிய மருத்துவக் கவுன்சில் மூலம் பரிந்துரைத்துள்ளது.
இதனைத் தொடக்கத்திலேயே அறிந்து கண்டித்தது திராவிடர் கழகம் சார்பில், கடந்த பிப்ரவரி 14 அன்று நாம் விடுத்த அறிக்கையிலேயே ”ஆட்சி தங்கள் கையில் சிக்கிக் கொண்டது என்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒற்றைக் கலாச்சாரத்தை - நாட்டின் பன்மொழி, பன்மத, பன்முகப் பண்பாட்டை அழித்து - புகுத்திடும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை இதிலும் புகுத்திட, ஒரு முயற்சி உருவாவதுபற்றி 13.2.2022 அன்று சில நாளேடுகளில் வந்துள்ள தகவல், நாட்டை சமஸ்கிருத மயமாக்குகின்ற வகையில் மற்றொரு திணிப்பைப் புகுத்த ‘நேஷனல் மெடிக்கல் கவுன்சில் (NMC)’ என்ற ஒன்றிய அரசின் அமைப்பு இதனை மாற்றி - ‘ஹிப்போகிரேட்டிக் ஓத்’ என்பதற்குப் பதிலாக, ‘ஷராக் ஷாபாத்’ (Charak Shapath) என்ற ஓர் உறுதி மொழியை - மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுக் கண்டித்தோம். வருமுன்னரே இந்த ஆபத்தினை உணர்த்தினோம்.
மருத்துவ அறத்துக்கே முரணான உறுதிமொழியை ஏற்பதா?
நோயாளிகள் எவராயினும், அவரிடம் பரிவும் அக்கறையும் காட்டி பாகுபாடின்றி மனிதநேயத்துடன் மருத்துவம் செய்ய உறுதி ஏற்கும் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியை எடுத்துவிட்டு, அந்த இடத்தில், விதவைகளுக்கும், அரசனால் வெறுக்கப்படும் மக்களுக்கும் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று மனிதநேயமற்ற முறையிலும், மருத்துவ அறத்துக்கே முரணாகவும் பேதம் பார்க்க வலியுறுத்தும் ஆயுர்வேத மருத்துவத்தின் ஷராக் சம்ஹிதைகள் காட்டும் உறுதிமொழியை ஏற்பதா? பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் க்ஷேமகரமான உறுதிமொழி இது.
Also Read : தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை - கோட்டாட்சியர் உத்தரவு
இது தொடர்பாக பிப்ரவரி 21 அன்று ஒன்றிய சுகாதாரத் துறை மன்சுக் மாண்டவ்யாவுடன் இந்திய மெடிக்கல் அசோசியேசன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக ஷராக் ஷாபத் கட்டாயப்படுத்தப்படாது என்றும் தெரிவித்ததாக அவ்வமைப்பின் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் மறுத்த அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு மாநிலங்களவையில் மார்ச் 29 அன்று பதிலளித்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், “ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக ஷாரக் ஷாபத் உறுதிமொழியைக் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என்று தேசிய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது” என்று பதிலளித்தார்.
ஆனால், எப்போதும் இத்தகைய விவகாரங்களில் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக நடந்து கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, வழக்கம்போல மறைமுகமாக தனது செயல்பாடுகளை நடத்திக் கொண்டிருப்பதைத்தான் மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 30) மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் வெள்ளைக் கோட் அணியும் நிகழ்வில் ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்குப் பதிலாக ஷராக் ஷாபத் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை அந்த மேடையிலேயே தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கண்டித்தார் என்பது பாராட்டத்தக்கது.
ஒன்றிய அரசின் அத்துமீறிய தலையீடு தடுக்கப்பட வேண்டும்
இச்செய்தி குறித்து நேற்று காலை (1.5.2022) சென்னை பெரியார் திடலில் கூடிய மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் “மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக மஹரிஷி சரக் சாபக் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணையைத் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், தமிழ்நாடுஅரசின் ஒப்புதலின்றி நடப்பதும், ஒன்றிய அரசின் அத்துமீறிய தலையீடும் தடுக்கப்படவேண்டும், தவறியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் காலையிலேயே நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், துறை ரீதியாக விசாரணை நடத்தவும், மதுரை மருத்துவக் கல்லூரி டீனைப் பணியிலிருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுத்தும் உத்தரவிட்ட செய்தியும் கூட்டம் முடிவதற்குள்ளாகவே கிடைத்தது. மகிழ்ந்தோம் - பாராட்டியும், புதிய தீர்மானம் போட்டோம்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைப் பாராட்டி தீர்மானம்
தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கையைப் பாராட்டி, திருத்தத் தீர்மானத்தை அக்கூட்டத்தில் நானே முன்மொழிந்து நிறைவேற்றினோம். அவசியமானவற்றில் விரைவான முடிவுகளை மேற்கொள்ளும் வியத்தகு ஆட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
எனினும், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் மறைமுக ஆதிக்கத்தையும், அதிகார ஆசை கொண்டோர் ஒன்றிய அரசுக்குப் பணிந்து தமிழ்நாட்டிலும் செயல்படுவதையும் கவனமாகத் தடுக்க வேண்டிய அவசியமிருப்பதையே இந் நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அதிகாரிகள் மட்டத்தில், குறிப்பாக பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறைகளில் பட்டம், பதவி, அதிகாரம், பதவி நீட்டிப்பு என்று ஆசை காட்டி, மறைமுகமாகத் தங்கள் திட்டங்களை நுழைத்துவிட வேண்டும் என்று பல வகையிலும் ஒன்றிய அரசு முயன்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்னவென்று தெரிந்தும், அதற்கு மாறாகச் செயல்பட சில அதிகாரிகள் முனைவதும், தகவல் வெளிவந்ததும் அதை மாற்றிக் கொள்வதுமாகச் சில இடங்களில் நடப்பதை நாம் அறிவோம். இதற்குக் காரணமானவர்களையும், மூலகர்த்தாக்களையும் கண்டறிந்து தடுத்திட வேண்டும்.
சமூகநீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ அரசாக தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு செயல்படுவது, தங்கள் அரசியல் அதிகாரத்தால் இந்நாட்டை ஆரிய ஆதிக்கத்துக்குள் வளைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் பெருந்தடையாக உள்ளது.
அதனால் தான் குறுக்குவழிகளில் முயற்சிக்கிறார்கள். ராஜ்பவன் விருந்தினர்களாக வளைக்கிறார்கள். ஒருபோதும் இதை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்பதைத் தான் நேற்றைய நடவடிக்கை காட்டியிருக்கிறது. மருத்துவத் துறையில் சமஸ்கிருத ஆதிக்கம் என்பது மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய நிலையை மீண்டும் உருவாக்கத் துடிக்கும் போக்கே! அதை ஒரு போதும் அனுமதியோம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dravidar Kazhagam, K.Veeramani, Madurai Medical college students, Sanskrit