Home /News /tamil-nadu /

திராவிடம் என்றாலே மிரளுகின்றனர்... ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு கண்டனம்

திராவிடம் என்றாலே மிரளுகின்றனர்... ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு கண்டனம்

ஆளுநர் ரவி - டி.ஆர். பாலு

ஆளுநர் ரவி - டி.ஆர். பாலு

திராவிடர்' என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை - டி.ஆர். பாலு

  திராவிடர் என்று அடையாளப்படுத்தி மக்களை பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் எனஆளுநர் ஆர்.என். ரவி பேசியதற்கு, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இந்திய சுதந்திர போருக்கு வித்திட்ட, வேலுார் சிப்பாய் புரட்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வேலுார் மக்கான் பகுதியிலுள்ள நினைவு துாணுக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ரவி, விந்திய மலையை அடிப்படையாக வைத்து தான், வடக்கில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தெற்கில் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தி இருக்கின்றனர். இதை வைத்து பார்க்கும்போது, ஆங்கிலேயர்கள் தான், திராவிடர் என்ற வார்த்தையை முதலில் குறிப்பிட்டவர்கள் என்பது தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார்.

  ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

  தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன.

  இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் வெளியேற்றம் - 144 தடை உத்தரவு

  தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார்கள். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை கழகத்தின் சார்பில் நான் அளித்தேன்.

  இந்த நிலையில், 'திராவிடர்' குறித்து ஆளுநர் அவர்கள் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். 'திராவிடர்' என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600 ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக 'திராவிடம்' என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா? இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?

  ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் அவர்கள் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

  மேலும் படிக்க: என்னை பழைய பழனிசாமியாக நினைக்காதீர்கள் - இபிஎஸ் பரபரபப்பு பேச்சு

  மகாபாரதத்தில் 'திராவிடம்' வருகிறது. காஞ்சிபுராணத்தில் 'திராவிடம்' இருக்கிறது. தாயுமானவர் 'திராவிடம்' சொல்கிறார். தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.இத்தகைய இந்தியச் சமூக வரலாற்றின் சாதாரணச் செய்திகளைக் கூட அறிந்து கொள்ளாமல் ஆங்கிலேயர்கள் வந்து தான் 'திராவிடர்கள்' என்று பிரித்தார்கள் என்று சொல்வது வரலாறு அறியாதவர் கூற்று. அல்லது வரலாற்றை மறைப்பவர்களின் கூற்று ஆகும்.

  'திராவிடம்' என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக இருந்தது. வடக்கு - தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன் - திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ் - சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது. இப்படி காலம்காலமாக இருந்த இன - இட - மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை - முன்னேற்றத்தை - எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம் ஆகும்.

  இதை படிக்க: உதயநிதியை முதல்வர் ஆக்க முயற்சி? அமைச்சர் மீது அர்ஜூன் சம்பத் பகீர் குற்றச்சாட்டு

  கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது. ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் ஆளுநர் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.

  பதவியேற்பின்போது அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக, இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும். வேற்றுமைகளை நீக்கும் செயல்களை ஆளுநர் முன்னெடுக்கலாம் .கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்னைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம்’  என்று டி. ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்
  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Dravidam, RN Ravi, T.r.balu, Tamil Nadu Governor

  அடுத்த செய்தி