60 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றி வந்த சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் முன்னோடியாக கருதப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட அவர், செவ்வாயன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாந்தாவின் உடல், பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் விவேக், சித்தார்த், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினேர் சாந்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு ட்விட்டரில், இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மூலம் ஏழை மற்றும் நலிந்த மக்களுக்காக சேவையாற்றியவர் சாந்தா என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது ட்விட்டர் பதிவில், புற்றுநோய் சிகிச்சைக்காக மனிதநேயத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும், நோயாளிகளை அவர் கருணையுடன் கவனித்துக் கொண்டதை நினைவுகூர்வதாகவும் கூறினார்.
புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதில், மருத்துவர் சாந்தா பெரும் பங்காற்றியவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அடையார் புற்றுநோய் மையத்தில் இருந்து மருத்துவர் சாந்தாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 72 குண்டுகள் முழங்க சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Dr. V Shanta will be remembered for her outstanding efforts to ensure top quality cancer care. The Cancer Institute at Adyar, Chennai is at the forefront of serving the poor and downtrodden. I recall my visit to the Institute in 2018. Saddened by Dr. V Shanta’s demise. Om Shanti. pic.twitter.com/lnZKTc5o3d
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.