தமிழகத்தில் தாமதிக்காமல் உடனே மதுக்கடைகளை மூட வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

டாஸ்மாக்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனே டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடும்படி அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூட ஆணையிட்டது மிகச்சிறந்த நடவடிக்கையாகும்.

  புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை மது வணிகம் மூலமாகத் தான் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் புதுவை அரசு மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும்.

  அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; மதுக்கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

  அவற்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடி திருத்தும் நிலையங்கள் உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை மூடுவதற்கும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், பலமுறை வலியுறுத்தியும் மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

  உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பரவும் கொரோனா வைரஸ் மதுக்கடைகளில் மட்டும் பரவாது என்று அரசு கருதினால் அது சரியல்ல. மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக மாலை நேரங்களில் கூடும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாகும். அந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக அங்கு இருப்பவர்களைத் தொற்றிக் கொள்ளும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

  மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது மட்டுமே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருவதற்கான காரணம் இல்லை. மாறாக, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

  ராமதாஸ்


  இந்த அறிவுரையைக் கூட மதிக்காமல் மதுக்கடைகளை தொடர்ந்து திறப்பது கொரோனா மேலும் பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் மதுக்கடைகள் திறந்திருந்தால், ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் ஒரு வேளை உணவுக்காக வைத்திருக்கும் பணத்தைக் கூட எடுத்து வந்து மது குடிப்பார்கள்.

  Must Read : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 2 வாரத்தில் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்?

   

  அதனால் ஏழைக் குடும்பங்களில் தினமும் சண்டையும், அமைதியின்மையும் குடி கொண்டு விடும். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும். அதன்மூலம் நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமின்றி, ஏழைகள் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடிகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: