தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா! - ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்

பிறமொழிகளில் உள்ள அரிய கலைச்செல்வங்களை நாம் தமிழுக்கு கொண்டு வரவில்லை.

  • Share this:
    உணவகங்களுக்குச் சென்றால் அங்கு எவரும் தமிழில் பேசுவதில்லை என்று கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”

    “இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது” என்பது தான் மேற்கண்ட திருக்குறளின் பொருள் ஆகும்.

    வள்ளுவரையும், வள்ளுவத்தையும் போற்றும் தமிழ்க் குடிகளான நாம், வள்ளுவத்தை கடைபிடிப்பதில்லை என்பது வேதனையானது. இனிமையான சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களை பயன்படுத்தக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால், நாமோ அழகான தமிழ் மொழிச் சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து ஆங்கில வார்த்தைகளை பேசுகிறோம். இனிய தமிழை படுகொலை செய்கிறோம்.

    உணவகங்களுக்குச் சென்றால் அங்கு எவரும் சோறு என்று கேட்பதில்லை. ‘ரைஸ்’ தான் வேண்டுமாம். ரைஸ் என்பதன் தமிழ் சொல் அரிசி ஆகும். ஆனாலும், அதை உணராமல் சோறு என்பதை ரைஸ் என்ற ஆங்கில வார்த்தை மூலமாகவே கேட்கின்றனர். உணவகங்கள் அனைத்தும் ரெஸ்டாரண்டுகளாக மாறிவிட்டன.

    குழம்பு என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆனால், நமது மக்கள் உணவகத்துக்கு சென்று விட்டால் ரைசுடன் கறி கொடுங்கள் என்கிறார்கள். கறி என்றால் இறைச்சி அல்ல... குழம்பாம். அப்படி என்றால் கறிக்குழம்பை, அதாவது இறைச்சிக் குழம்பை எவ்வாறு அழைப்பார்கள்? அதற்கு கிரேவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    ஆங்கிலத்தில் கிரேவி என்றால் இறைச்சியை வேகவைத்து வடிக்கும் போது கிடைக்கும் நீர் என்பது பொருள். இறைச்சிக் குழம்பை கிரேவி என்று சொல்வதில் பொருள் உள்ளது. இது காய்கறி மசாலா குழம்புக்கு எந்த வகையிலும் பொருந்தாது. ஆனால், நமது ஆட்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் காய்கறி மசாலா குழம்புக்கு வெஜ்-கிரேவி என்று பெயர் வைத்து விட்டனர்.

    உணவுகளில் தமிழ்க் கொலை இத்துடன் நிறைவடைந்து விடவில்லை. நெல் என்ற சொல் ‘பாடி’ ஆகிவிட்டது. வயல் ஃபீல்டு ஆகி விட்டது. கோழி சிக்கனாகவும், ஆட்டிறைச்சி மட்டனாகவும் மாறி விட்டன. உணவு விடுதிகளில் மீன் என்றால் பெரும்பான்மையினருக்கு தெரியாது. ஃபிஷ் என்றால் தான் தெரியுமாம்.

    Must Read : வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி முதல்வர் வேட்பாளர் - ராமதாஸ் உறுதி



    ஆனால், நாம் இருப்பது தமிழ்நாடாம்; நாமெல்லாம் தமிழர்களாம். என்ன கொடுமை இது? “எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர்” என்று பாரதியார் கூறினார். ஆனால், பாரதியாரின் வார்த்தைகளை நாம் மதிக்கவில்லை. பிறமொழிகளில் உள்ள அரிய கலைச்செல்வங்களை நாம் தமிழுக்கு கொண்டு வரவில்லை. தமிழ் முன்னோர்களால் மருத்துவப் பாடத்திற்கான தமிழ் வழி பாடநூல்கள் கூட உருவாக்கப்பட்டிருந்தன. நாம் அதைப் போன்ற சாதனைகளை படைக்க வேண்டும். இருக்கும் தமிழையாவது காப்பாற்றலாம் அல்லவா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதையும் செய்யாமல் தமிழைக் கொலை செய்கிறோம். அதனால் தான் சொல்கிறேன். தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: