Sirkazhi Encounter | சீர்காழியில் நடந்த இரட்டைக் கொலை.. 16 கிலோ நகைகள் கொள்ளை..  என்கவுன்டர் நடந்தது எப்படி?

Youtube Video

கடலூர் மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து 16 கிலோ நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இரண்டு கொலைகளை அரங்கேற்றினர். கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் உயிரிழந்தான்.

  • Share this:
    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 55 வயதான தன்ராஜ்; இவர் கடலூர் மாவட்டம் சீர்காழி தர்மகுளம் பகுதியில், 40 ஆண்டுகளாக நகை அடகு கடை மற்றும் தங்கநகைகள் மொத்த வியாபாரக் கடையும் நடத்தி வருகின்றார். இவருக்கு 45 வயதில் ஆஷா என்ற மனைவியும் 28 வயதில் அகில் என்ற மகனும் இருந்தனர். அகிலுக்கு திருமணம் ஆகி நெக்கல் என்ற மனைவி உள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தனர்.

    புதன்கிழமை காலை 6 மணியளவில் தன்ராஜ் வீட்டிற்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை தட்டியுள்ளது. கதவை திறந்த தன்ராஜ் , வந்தவர்களிடம் யார் என்று கேட்டுள்ளார். வந்தவர்கள் ராஜஸ்தானியில் பேசியதால் கதவை திறந்து வெளியே வந்துள்ளார் தன்ராஜ்.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்ராஜின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார் ஒருவர். மற்ற இருவரும் வீட்டிற்குள் நுழைந்து நகை பெட்டிகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    கொள்ளையர்களை பார்த்து வீட்டில் இருந்த தன்ராஜின் மனைவி ஆஷா ,மகன் அகில் ஆகியோர் பலமாக கத்த தொடங்கியுள்ளனர். ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல் திடீரென ஆஷாவையும் அகிலையும் சரமாரியாக கத்தியாலும் அரிவாளாலும் வெட்டிச் சாய்த்துள்ளது.

    தன்ராஜையும் மருமகள் நெக்கலையும் கத்தியால் தாக்கவிட்டு தன்ராஜின் கியா வகை புதிய சொகுசு காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது. இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆஷா மற்றும் அகில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

    தகவலறிந்த சீர்காழி போலீசார், மாவட்ட எல்லைகளை உஷார் படுத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எருக்கூர் மேலத்தெரு ஓலையம்பூத்தூர் வயல்பகுதியில், புதன்கிழமை காலையில் மூன்று நபர்கள் அமர்ந்திருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    ஏற்கனவே கொலை செய்தியை அறிந்திருந்த மக்கள் சந்தேகப்படும் நபர்கள் பற்றி அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வயல்வெளியில் பதுங்கியிருப்பது கொலைக் கொள்ளை குற்றவாளிகள் தான் என்று உறுதி செய்தனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் வயல் வெளியை சுற்றி வளைத்த போலீசார் கொள்ளையர்களை சரணடையும்படி அறிவித்தனர். சரணடைய மறுத்த கொள்ளையர்கள், கத்தி, துப்பாக்கியை காட்டி காவலர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டினர்.  தங்கள் அருகில் யார் வந்தாலும் சுட்டுவிடுவோம் என்று அச்சுறுத்தினர்.

    அரை மணிநேரத்திற்கு மேலாக துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள் இருவரிடமும் காவலர் சுரேஷ் பேச்சு கொடுத்தவாறே வயலில் இறங்கி நேக்காக பிடித்தார். மற்றொருவரை போலீசார் நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டச் சொன்னபோது, போலீசார் மீது கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் காவலர் ஒருவர் தோள்பட்டையில் காயமடைந்தார்.

    இதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பிற்காக சுட்டதில் கொள்ளையர் மணிபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு கொள்ளையர்களையும் பிடித்த போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ நகைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மொத்தத்தில் சம்பவம் நடந்த நான்கே மணிநேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களைப் போலீசார் பிடித்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க... பழனியில் காவடி எடுத்த பாஜக மாநில தலைவர் எல். முருகன்..

    நான்கே மணிநேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்த போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: