முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம் - ராமதாஸ்

DS Gopinath | news18
Updated: February 13, 2018, 4:35 PM IST
முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம் - ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
DS Gopinath | news18
Updated: February 13, 2018, 4:35 PM IST
முதலீடே வராத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மத்தியில் நடக்கும் என  அறிவிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை பார்க்கும்போது பெருமிதத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது...

முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள அளவில் எந்த விதமான தொழில் வளர்ச்சியோ, வேலைவாய்ப்பு பெருக்கமோ ஏற்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

மேற்கண்ட மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடியில் ரூ.62,738 கோடி மதிப்பிலான முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் இருப்பதாகவும்,  இத்திட்டங்களின் மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 100 நாட்களில் அதாவது 2016-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி 7 திட்டங்கள் நிறைவடைந்து விட்டதாகக் கூறி அவற்றை ஜெயலலிதா திறந்து வைத்தார். அவற்றின் மதிப்பு ரூ.10,054 கோடி ஆகும். உலகில் எந்த நாட்டிலும் 100 நாட்களில் ரூ.10,054 கோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக வரலாறு இல்லை. ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்களாக கணக்குக் காட்டித் தான் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போதிலிருந்தே இதுபோன்ற புள்ளிவிவரங்களை அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை சரியான புள்ளிவிவரங்கள் என்றால் அதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என்று வினா எழுப்பினால் அதற்கு மட்டும் அரசிடமிருந்து விடை கிடைப்பதே இல்லை.

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளின் உண்மை நிலை என்னவென்றால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த மொத்த முதலீடுகளின் அளவு ரூ.32,702 கோடி மட்டும் தான். இதிலும் கூட ரூ. 19,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலம் சார்ந்த பல்வேறு சர்ச்சைகளால் இன்னும் செயலாக்கம் பெறவில்லை. அதனால் இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி மட்டும் தான். இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட  தொகையில் வெறும் 5.34 விழுக்காடு மட்டும் தான்.

2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்று கூறப்பட்டாலும் உண்மையில் ரூ.300 கோடிக்கும் கூடுதலாக செலவானது. ஆனால், அதற்கேற்ற பயன் இல்லை. எனவே, பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறாகும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...