மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து விவரம் எதுவும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில், நேரில் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 9ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓ,பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் இருப்பது மட்டுமே தெரியும். அதுதவிர அவருக்கு இருந்த வேறு உடல்நலக் குறைவுகள் குறித்து எதுவுமே தெரியாது. சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்த பிறகு பார்க்கவேயில்லை. அதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிலைய நிகழ்ச்சியில்தான் கடைசியாகப் பார்த்தேன்.
இதையும் படிங்க: இதெல்லாம் 2026-ம் ஆண்டுக்கான முன்னோட்டம்... ஜெயக்குமார் பேச்சால் சர்ச்சை
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரமும் தெரியாது. சொந்த ஊரில் இருந்த போதுதான், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அறிந்துகொண்டேன் என்று பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் படிங்க: 24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி... ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார் மனு
பின்னர் மதியம் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற தான் கூறவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆனதுவரை தான் பேசியது அனைத்தும் சரியானதே என்றும் அவர் தெரிவித்தார்.
காலையிலிருந்து நடைபெற்ற விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் 78 கேள்விகளை கேட்டுள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஓ பன்னீர்செல்வம் ஆஜராகிறார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.