• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கொரோனா நிவாரண நிதி வழங்குக! பொதுமக்கள், நிறுவனங்களிடம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்..

கொரோனா நிவாரண நிதி வழங்குக! பொதுமக்கள், நிறுவனங்களிடம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்..

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

 • Share this:
  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குக, நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது நமது மாநிலத்தில் 1,52,389 பேர் இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பின்மீதும் மக்கள்மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  வரலாறு காணாத இந்தச் சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல், ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இத்தகைய இடர்ப்பாடுகளே மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. நாம் அனைவரும் ஒன்றுகூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது.

  இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

  மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

  நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

  1. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின்
  மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி இரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

  2. Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக
  கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.
  வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  கிளை - தலைமைச் செயலகம்,
  சென்னை – 600 009

  சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070
  IFS Code – IOBA0001172
  MICR Code – 600020061
  CMPRF PAN – AAAGC0038F

  3. UPI – VPA ID: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik போன்ற பல்வேறு செயலிகள்.

  4. மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:-
  அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
  முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
  நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
  தலைமைச் செயலகம்,
  சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா.
  மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in

  5. தற்போதைய நோய் தொற்று நிலையில், நேரிடையாக மாண்புமிகு முதலமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும். எனினும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: