DOCTOR EXPLAIN HOW ARE VACCINATION TESTS PERFORMED AND HOW MANY DAYS THE VACCINE WILL GIVE IMMUNITY VIN SAR
தடுப்பூசி சோதனை எப்படி நடைபெறும்? எப்போது எதிர்ப்பு சக்தி உருவாகும்? - மருத்துவர்கள் விளக்கம்
சுப்ரமணியன் சுவாமிநாதன், தொற்று நோய் நிபுணர், த.வி.வெங்கடேஸ்வரன், மூத்த அறிவியலாளர்
சோதனையில் 100 பேர் பங்கேற்றால் அதில் 50 பேருக்கு மட்டுமே உண்மையான தடுப்பூசி வழங்கப்படும். மற்றவர்களக்கு 'பாசாங்கு' ( placebo) மருந்து எனப்படும் மற்றொரு மருந்து வழங்கப்படும்.
கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கான அனுமதி பெற்று இன்று முதல் நபராக 90 வயது பிரிட்டன் மூதாட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் தடுப்பூசி சோதனைகள் எப்படி நடைபெறும்? தடுப்பூசி போட்டு எத்தனை நாட்களில் எதிர்ப்பு சக்தி வரும் என்பது குறித்த கேள்விகளுக்கு மருத்துவர், அறிவியலாளர்கள் விளக்குகிறார்கள்.
ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன் நான்கு கட்ட சோதனைகள் நடைபெறுவது வழக்கம். இது பெருந்தொற்று காலம் என்பதால் மூன்று கட்ட சோதனைகள் நடத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. மூன்று கட்ட சோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானதா, பின் விளைவுகளை ஏற்படுத்துமா என கண்டறிய போதுமான தரவுகளை கொடுக்கும்.
இதுகுறித்து மூத்த அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், டபிள் பிளைண்ட்(double blind) சோதனை முறை என்பது உலக அறிவியல் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும். அதாவது சோதனையில் 100 பேர் பங்கேற்றால் அதில் 50 பேருக்கு மட்டுமே உண்மையான தடுப்பூசி வழங்கப்படும். மற்றவர்களக்கு 'பாசாங்கு' ( placebo) மருந்து எனப்படும் மற்றொரு மருந்து வழங்கப்படும். யாருக்கு எது வழங்கப்பட்டது என்பது சோதனை முடியும் வரை பங்கேற்கும் யாருக்கும் தெரியாது.
தெரிந்தால் அவரவர் தினசரி நடத்தையில் வழக்கத்துக்கு மாறாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் தனக்கு நோய் ஏற்படக்கூடாது என அதிகவனமாக இருக்கலாம். இல்லையென்றால் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் வழக்கத்தை விட அலட்சியமாக இருக்கலாம். இவை தடுப்பூசியின் உண்மைத்தன்மையை கண்டறிய தடையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து பேசிய தொற்று நோய் நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன், ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி உருவாக எத்தனை முறை அந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவியலாளர்கள், மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இரண்டு டோஸ் எடுக்க வேண்டிய மருந்து என்றால் இரண்டு டோஸ் கொடுத்த பிறகு தான் அதற்கான எதிர்ப்பு சக்தி உருவாகும்.
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அடுத்த டோஸ் வழங்கப்படுகிறது. எனவே அந்த டோஸ் கொடுத்த முடித்த ஒரு மாதத்துக்கு பின் தான் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே தடுப்பூசி போட்டு இரண்டு மாதங்கள் ஆன பிறகு தான் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதற்கு முன் எதிர்ப்பு சக்தி எதிர்ப்பார்ப்பது தவறு என்று தெரிவித்தார்.